காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (29) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு வேலாயுதம் என்கிற அண்ணனும், நாகப்பன் என்கிற தம்பியும் உள்ளனர். மூவருக்கும் தாய்,  தந்தை இல்லாததால் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். தங்களுடைய அன்றாட தேவைகள், உணவு தயார் செய்தல் உள்ளிட்டவற்றை மூன்று  சகோதரர்களும் இணைந்து செய்து வந்துள்ளனர். ஆனால் வேலாயுதம் மது பழக்கத்திற்கு அடிமையாகி, தொடர்ந்து மது அருந்தி விட்டு நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது, காலம் தாழ்ந்து வீட்டிற்கு வருவது ஆகியவற்றை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.



இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான வேல்முருகன் நேற்று நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அண்ணன் வேலாயுதம், தம்பி நாகப்பன் ஆகியோரிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால் அன்று இருவருமே நாங்கள் சாப்பாடு தயார் செய்யவில்லை என கையை விரித்த காரணத்தால் போதையில் கோபித்துக் கொண்ட வேல்முருகன் அறைக்கு சென்று அங்கிருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார்.

 

இதனை அறிந்த இருவரும் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்து, தூக்கில் தொங்கிய வேல்முருகனை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே வேல்முருகன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தனர்.



இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் உடலை மீட்ட சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேல்முருகனின் சகோதரர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சம்பவம் நடந்த இரவு வேல்முருகன் அதிக அளவு மது போதையில் வந்துள்ளார். அன்று இரவு நாங்கள் உணவு செய்யவில்லை உணவகத்தில் தான் நாங்கள் சாப்பிட்டோம். இந்நிலையில் நண்பர்களுடன் மது குடிக்கச் சென்ற தன்னுடைய சகோதரன் வேல்முருகன் இரவில் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. எனவே அவர் நண்பர்களுடன் உணவு அருந்தி இருப்பார் என நினைத்து விட்டு விட்டோம். நள்ளிரவில் வந்த வேல்முருகன் திடீரென்று எங்களிடம் உணவு கேட்டார், நாங்களும் அவர் குடிபோதையில் வந்ததால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உணவு இல்லை என்று கண்டிப்புடன் சொல்லி விட்டோம். இந்நிலையில் தான் வேல்முருகன் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

சகோதரர்கள் சொல்வதுபோல் உணவு இல்லை என்பதற்காக தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என வழக்கு பதிவு செய்து சுங்கா சத்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் சாப்பாடு செய்யாததால் கோபமடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.