சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை  சுமார் 7 மணி அளவில், மலை மீது இருந்து இளைஞர் ஒருவர் அலறல் சத்தத்துடன் வருவதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த நபருக்கு கழுத்துப்பகுதி அருப்பட்டு ரத்தவெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 


 

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு ஆட்டோவில், ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  கழுத்துப்பகுதியில் 27 தையல்கள் போடப்பட்டது. கழுத்துப்பகுதியில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.



 

இந்த சம்பவம் பற்றி சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தெரிந்தவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை செய்த போது கழுத்து அறுக்கப்பட்ட நபர் திருநீர்மலை பகுதி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் தீபக் என்பதும், இவருக்கு ஜனனி (21) என்பவருடன் திருமணமாகி 3வயதில், ஒரு மகனும் 2 வயதில் மகளும் உள்ளதும் தெரியவந்தது. 

 

கடந்த ஓராண்டுக்கு முன் திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருடன் தீபக் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில் காலை 11 மணி அளவில் சமாதானம் பேசுவதற்காக தீபக்கின் வீட்டிற்கு வந்த நந்தகுமார், தீபக்கை மது அருந்துவதற்காக திருநீர்மலை மலையின் மீது அழைத்துச் சென்று தனது நண்பர்கள் மூவருடன் மது அருந்தி உள்ளார்.  அப்போது நந்தகுமார் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து தீபக்கை கழுத்தறுத்து கொல்ல முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.



 

தீபக்கின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய நந்தகுமாரையும் அவரது நண்பர்களையும் சங்கர் நகர் போலீசார்  தேடி வருகின்றனர். இதற்கிடையில் உயிருக்கு  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீபக்கின் உறவினர்கள், நந்தகுமாரை கைது செய்ய வேண்டும் என கூறியதுடன் நந்தகுமாரின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் தலைமறைவாக உள்ள தீபக்கின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 


மேலும் செய்திகள் படிங்க அன்று பாம்பே வரை ஏற்றுமதியான கருங்குழி வெற்றிலை..! காய்ந்து காணாமல் போன கதை என்ன ?


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X