கேரளாவில் ஓனம் திருவிழாவையொட்டி படங்கள் வரிசையாக ரிலீசாவது வழக்கம். அந்த வரிசையில் ஓனத்துக்குச் சற்று முன்னதாகவே அமேசானில் வெளியாகியுள்ளது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’குருதி’ திரைப்படம். பிருத்விராஜ் ரோஷன், மேத்யூ,முரளி கோபி, ஸ்ரீண்டா, மம்மூகோயா, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தற்போது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியானதை அடுத்து படம் ட்விட்டரில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. பிருத்விராஜ் மேனன் தயாரித்து மனு வாரியர் இயக்கியுள்ள இந்தப் படம் சமூகத்தின் மிகமுக்கியப் பிரச்னையை பேசுகிறது. இந்தத் திரைப்படம் பிருத்விராஜின் மூன்றாவது தயாரிப்பு.முதலில் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த நிலையில் இரண்டாம் அலை காரணமாக பிரைமில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
’படம் ஓ.டி.டி., தளத்தில் வெளியானது எனக்கு எந்த மனக்கஷ்டமும் இல்லை. பெருந்தொற்று காலத்தில் மக்கள் ஓ.டி.டி.,யில் திரைப்படம் பார்க்கப் பழகிவிட்டனர். ஆனால் ஓ.டி.டி. தளங்களால் சினிமா திரையரங்குகளுக்கு அழிவு காலம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. திரையரங்குகள் மூடியிருப்பது நிரந்தரம் கிடையாது.திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் அதில் திரைப்படங்கள் வெளியாகும்’ என அண்மையில் நம்பிக்கையுடன் பேசியிருந்தார் பிருத்விராஜ்
’குருதி’ திரைப்படம் எதைப்பற்றி?
படத்தின் ஒருநிமிட ட்ரெய்லரே காட்சிக்குக் காட்சி வெட்டப்பட்ட கதாபாத்திரங்களின் அறிமுகமாக இருந்தது.படம் எதைப்பற்றியதாக இருக்கும் என எழுப்பப்பட்ட் கேள்விக்கு, ‘படத்தை பார்த்து மக்கள் அதை தெரிந்துகொள்ளட்டும் ஆனால் படம் என்ன ஜானர் என்று கேட்டால் சோஷியோ பொலிட்டிகல் திரில்லர் வகையறா. மற்றபடி படத்தின் எந்த விவரங்களும் சஸ்பென்ஸ்’ எனக் கூறினார்.
‘இது அசைக்க முடியாத நம்பிக்கையை நிறுத்தமுடியாத வன்முறை எதிர்கொள்ளும் படம். சாதாரண மனிதர்கள் அவர்களது வரம்பினை சோதனை செய்யும்போது எப்படி எதிர்வினையாற்றுவார்கள், வெறுப்பு என்பது எவ்வளவு ஆபத்தானது என பல்வேறு கோணங்களை கதை பேசுகிறது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.