கொரோனா வைரஸ் எதிரொலியாக  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் திரு ஆடிபூர திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி தங்கத்தேர் இழுக்கப்பட்டது.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோயிலில் நடைபெற்ற திருஆடிப்பூர தேரோட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர்,பட்டர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மற்றும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் நடக்கும்.ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் கடந்த 7 ஆம் தேதி கருடசேவையும் 9 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.





தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தளங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுபாடுகள் விதிக்கபட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடை பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு சில நிபந்தனைகளுடன் கோயில் வளாகத்திலேயே திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது. 




அதனடிப்படையில் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆடிப்பூர விழா இன்று 9 ஆம் நாளை எட்டியுள்ளது.வழக்கமாக திரு ஆடி பூரம் தேரோட்டத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது கொரோனாவை கட்டுபடுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவில் வளாகத்திற்க்கு உள்ளே நடைபெற்ற தங்கத்தேரோட்டம்  நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருள திருக்கோயில் பட்டர்கள்,மாவட்ட ஆட்சியாளர் மேகநாத ரெட்டி,அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு கோவிந்தா கோபாலா என கோஷம் எழுப்பி தங்க தேரை வடம் பிடித்து  இழுத்தனர்.கடந்த ஆண்டும் இதை போல் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள்ளே பக்தர்கள் இன்றி  தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா ஊடரங்கு விதிகள் இல்லாத நாட்களில் இந்த விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். கோலகலமாக நடைபெறும் இவ்விழாவில் தேரை இழுக்க பக்தர்களிடையே போட்டி நிலவும். இந்நிலையில் தான் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தமிழகத்தின் முக்கிய கோயிலாக விளங்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் முக்கியத் திருவிழாக்கள் அடுத்தடுத்து, கொரோனா ஊரடங்கு காரணமாக தவிர்க்க முடியாத காரணங்களால் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய விழா குறித்து தகவல் அறிந்திருந்த உள்ளூர் வாசிகள் விழாவில் பங்கேற்க வந்தனர். ஆனால், கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.