செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள தோட்ட நாவல் பகுதியை சேர்ந்தவர் அசோக் .இவருடைய மனைவி நந்தினி. அசோக் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அசோக் மற்றும் நந்தினிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது குழந்தை லித்வின் வயது இரண்டு, கடந்த 3 ஆம் தேதி லித்விண்ணிற்கு திடீரென்று வாந்தி , மயக்கம் வந்துள்ளது .



 

இதனைத் தொடர்ந்து மதுராந்தகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குழந்தைக்கு உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.  எந்தவித காரணமும் இன்றி, குழந்தைக்கு ஏன் திடீரென, வாந்தி மயக்கம் ஏற்பட்டது என்பது குறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் குழந்தை பாராசிட்டமால் என்கிற மாத்திரைகளை விழுங்கிய காரணத்தினால், ஓவர்டோஸ் ஆகி குழந்தைக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.



 

இதுகுறித்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், குழந்தை மாத்திரை சாப்பிட்டு 18 மணி நேரத்திற்கு மேல் ஆன காரணத்தினால், குழந்தையை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ஒருவேளை குழந்தை மாத்திரை சாப்பிட்டு 8 மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்தால், நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து  மேலும் கூறுகையில், பாராசிட்டமால் என்ற மாத்திரை  அதிக டோஸ் ஆகும்பொழுது, சில மணி நேரங்களில் சிறுநீரகம் பாதிப்படைந்து அவை செயலிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தைக்கும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காரணத்தினால்தான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .

 

இதுகுறித்து குழந்தை நல மருத்துவர் கூறுகையில் ,1 முதல் 5 வரை வயதுள்ள குழந்தைகள் புதியதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் துறுதுறுவென இருப்பார்கள் . அவர்கள் புதிதாக பார்க்கும் அனைத்து பொருளையும் சோதித்து பார்க்கும் இயல்பு இயற்கையாகவே வந்துவிடும். எனவே, மாத்திரை உள்ளிட்ட பொருட்களை கைக்கு எட்டாத வகையில் பெற்றோர்கள் வைக்க வேண்டும். இல்லையென்றால், அது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என தெரிவித்தார். 



இது குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ர.ருக்மாங்கதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறாா். பெற்றோர்களின் அலட்சியத்தால், மாத்திரை விழுங்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு... 

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X