ஊரடங்கு காலத்தில் மீன் பிடி தடைக்காலம் நீடித்தும் மீன்கள் இனப்பெருக்கம் அதிகரிக்கவில்லை என மீனவர்கள் வருத்தம் தெரிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் முடிந்தது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இராமேஸ்வரம், மண்டபம், சோலியக்குடி, ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மீனவர்கள் அதிகளவு கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று ஜூன் 30-ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்பினர். இந்நிலையில் மீன்கள், இறால்கள் அதிகளவு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
இது குறித்து இராமேஸ்வரத்தை சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ஜெசுராஜிடம் கேட்டபோது.....," மத்திய அரசு உத்தரவுபடி மீன்பிடி தடைகாலம் முடிந்தும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. கொரோனா அச்சம் காரணமாகவும், அதிகளவு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்தால் ஜூன்-30ல் தான் கடலுக்கே சென்றோம். அதிகளவு தடை காலம் இருந்த போதும் அதிகளவு மீன்கள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு விசைப்படகுகளுக்கும் சுமார் 200 கிலோ முதல் 350 கிலோ இறாலும், 25 கிலோ முதல் 80 கிலோ வரை நண்டும், 40 கிலோ முதல் 200 கிலோ வரை கனவாவும் மட்டுமே கிடைத்தது. காரணம் மீன்பிடி தடைக்காலம் முழுமையாக வைக்கப்படுவதில்லை.
விசைப்படகுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளை வைத்துவிட்டு நாட்டுப்படகுகளை அனுமதிக்கின்றனர். நாட்டுப் படகில் அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். அதனால் ஒட்டுமொத்த இனப்பெருக்கமும் பாதிப்படைகிறது. கொரோனாவிற்கு எப்படி முழு ஊரடங்கு போட்டு கட்டுப்படுத்துகிறோமோ அதே போல் மீன்பிடி தடைகலாம் முழுமையாக்க வேண்டும். அது தான் அனைவருக்கும் ஆரோக்கியம். அதே போல் டீசல் விலை உயர்வு எங்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது. அதனை உடனடியாக குறைக்க வேண்டும். மேலும் எக்ஸ்போர்ட் கம்பெனிகள் எங்களிடம் பொருட்களை விலை குறைவாக எடுக்கின்றனர். கெட்டு போகும் பொருள் என்பதால் வேறு வழியில்லாமல் விற்பனை செய்து விடுகிறோம். 4 கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்கின்றனர். எனவே அதனை நீக்கி அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
பொதுவாக மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள், திரும்பும் போது படகு நிறைய மீன்களுடன் திரும்புவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீன்கள் கிடைப்பதில்லை. மாறாக மீன்குஞ்சுகள் கிடைக்கிறது. மீன்களின் இனப்பெருக்க காலம் மாறியதாகவே தெரிகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இலங்கை தொடுக்கும் கடல் அரசியல் : மீனவர் உயிருக்கு ஆபத்தா ?