ராமநாதபுரம் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சரத் பாபு. இவர் மதுரையில் உள்ள பிரபல கண்மருத்துவமனைக்கு உறவினரை பார்க்க சென்றுள்ளார். அப்போது சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் மதுரை கூடல் நகர் பகுதியில் உள்ள அவரது நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டை தேடி சென்ற போது, வேறு ஒரு வீட்டில் மாட்டிக்கொண்டார். அங்கிருந்த நபர்கள் அவரிடம் பணம் மற்றும் நகைகளை பறித்து சரத் பாபுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது சரத் பாபு ' என்னை விடுங்கள் போலீசில் சொல்லிவிடுவேன் என தெரிவித்துள்ளார். அதற்கு பணத்தை பறித்த 'ராஜ பிரபு’ என்பவர் ’நானே போலீஸ் தான் போடா' என்று மிரட்டியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சரத் பாபு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக புகாரை பெற்ற கூடல்புதூர் காவல்துறையினர் மறைந்து இருந்து நோட்ட மிட்டுள்ளனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட இடத்தில் விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மற்றும் மலம்பட்டி கக்கன் நகரை சேர்ந்த மச்ச ராஜா மற்றும் மணப்பட்டி ராஜபிரபு ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் ராஜபிரபு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணி செய்துவந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் முன்னாள் காவலர் ராஜபிரபு உள்ளிட்ட 5 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர்....," மேலூர் மணப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜபிரபு சிவகங்கையில் ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வந்தார். அப்போது கொட்டாம்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளரை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் முறையாக பணிக்கு வராததால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பின்னதாக சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்வது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வது போன்ற குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் தான் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு இளம்பெண்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு விபச்சார ஏஜெண்டாக செயல்பட்டுவந்துள்ளார். இந்நிலையில் கூடல்நகர் பகுதியில் மறைமுகமாக விபச்சாரம் செய்து வந்துள்ளார். அப்போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதால் சிக்கியுள்ளார். ராஜ பிரபு தன்னை போலீஸ் என கூறிக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவது, கொலை மிரட்டல் விடுப்பது என்று பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில் சிக்கியுள்ளார். எனவே ராஜபிரபு போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டனர்.
முன்னாள் காவலர் ராஜபிரபு பல பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - குறைந்தது உள்ளூர் பக்தர்களின் வருகை ; பொலிவு பெறுமா மீனாட்சியம்மன் கோவில் !