கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேசமயம் இந்த வசதிகள் கிடைக்காத மலைப்பகுதிகளிலும், அடர்ந்த வனங்களிலும் வசிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. பல இடங்களில் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருவது நடந்து வருகிறது. அதே போல குழந்தை திருமணங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் கல்வி தொடர வேண்டுமென்பதற்காகவும் ஆங்காங்கே பட்டதாரிகள் ஆசிரியர்களாக மாறி பாடம் எடுத்து வருகின்றனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, செம்மனரை பழங்குடியின கிராமம். இக்கிராமத்தில் இருளர், குரும்பர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 120 வீடுகள் உள்ள இக்கிராமத்தில் சுமார் 100 குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் அருகேயுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, சுதா, பார்வதி, மகேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சமுதாய கூடம் வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
இதுகுறித்து எம்.பில் பட்டதாரியான திருமூர்த்தி கூறுகையில், “கொரோனா தொற்று மற்றும் ஊரடரங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் அதிகமான பெண் குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. அதேபோல பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்தன. பள்ளிகள் இருக்கும் போது இது போன்ற நிலை இல்லை. ஊரடங்கில் குழந்தைகள் கிராமத்தில் முடங்கியுள்ள நிலையில், இவை அதிகரித்துள்ளன. எனவே இந்நிலையை மாற்ற வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை வரவழைத்தோம். சமுதாயக் கூடத்தை வகுப்பறையாக மாற்றி, பாடம் நடத்தி வருகிறோம்.
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறோம். பள்ளிக்கூடம் போலவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீட்டில் இருந்து மாணவர்களை உணவு எடுத்து வருகின்றனர். பழங்குடி குழந்தைகள் சொந்த மொழியில் பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பேசுவதில் சிரமங்கள் உள்ளது. அதனால் பழங்குடியினரின் சொந்த மொழியில் பேச வைத்து, அதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றுத் தருகிறோம். அன்னா, ஆவண்ணா கூட தெரியாத குழந்தைகள் கல்வி ரீதியாக நல்ல நிலைக்கு வருகின்றனர். விளையாட்டு மற்றும் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கற்றுத் தருகிறோம். குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். அருமையாக படித்து வருகின்றனர்.
செம்மனரை பகுதியில் நண்பர்களுடன் இணைந்து ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறோம். சேவை நோக்கத்தில் நடத்தப்படும் அக்கடை மூலம் குறைந்த விலையில், தானிய வகை, கீரை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறோம். இதனால் அப்பகுதி மக்களின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது” என அவர் தெரிவித்தார்.