சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் 'தான் கமிஷனர்' என்று கூறிக் கொண்டு ஊரை அடித்து உலையில் போட்டு வந்துள்ளார். கமிஷனர் என்று நம்பும் அளவுக்கு சைரன் வைத்த பொலிரோ கார், டிப் டாப்  பேண்ட்- சட்டை, ஏர்கன் என கண்ணாடி போட்ட அதிகாரியாய் தமிழ்நாடு முழுதும் வலம் வந்தாக கூறப்படுகிறது.




இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த லெட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையின் போது டுபாக்கூர் கமிஷனர் விஜயன் சிக்கினார். " நான் கமிஷனர், என்னையே மறித்து விசாரணையா ?" என தோரணையாக பேசியுள்ளார். ஆனால் பட்டிவீரன் பட்டி போலீசாருக்கு விஜயன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. "சென்னை போலீஸ் கமிஷனர் என்கிறார். ஆனால் நம்ப முடியவில்லையே" என காவல்துறையினர் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடித்து ’உங்க ஐ.டி கார்டை காட்டுங்கள் சார்’ என பட்டிவீரன் பட்டி காவல்துறையினர் கேட்டுள்ளனர். ’இந்தா பிடி’ என தனது ஐ.டி கார்டை எடுத்துக் காட்டியுள்ளார் டுபாக்கூர் கமிஷனர் விஜயன். அவர் காண்பித்த அடையாள அட்டையில் அசிஸ்டண்ட் கமிஷனர் (Assistant commissioner) என்று இருந்துள்ளது.




காவல் துறையினருக்கு அடுக்கடுக்கான சந்தேகம் ஏற்பட மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து விஜயனை விசாரித்த போது அவர் கமிஷனர் இல்லை. போலியான நபர் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜயன் வைத்திருந்த சைரன் பொலிரோ கார், செல்போன், அடையாள அட்டை, ஏர்கன் உள்ளிட்ட அனைத்தையும் கைபற்றி ஏ.டி.எஸ்.பி சந்திரன் மற்றும் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த விஜயன் தான் கமிஷனர் என கூறி பலரையும் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!


மேலும் இது குறித்து காவல்துறையினர் நம்மிடம்….,” வாகன சோதனையில் சிக்கிய விஜயன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. விசாரணைக்கு காரைவிட்டு இறங்க சொன்ன போது கூட தொரை இறங்கவில்லை. கண்ணாடி மாட்டி இருந்தால் நல்லவர் என நம்பிவிடுவார்கள் என்பதர்காக தான் கண்ணாடி மாட்டியுள்ளாராம். இருந்த போதிலும் அவரின் பேச்சு, நடையை வைத்து ஓரளவு கண்டுபிடித்துவிட்டோம். ஐ.டி கார்டை காண்பித்த உடன் எங்கள் சந்தேகம் உறுதியானது. பின்னர் விஜனை எங்கள் பாணியில் விசாரித்ததும் உண்மையை சொல்லிவிட்டார். போலி கமிஷனர் பல இடங்களில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டிருக்கலாம் அதனால் கூடுதல் விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.


 


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!