2019 ஜனவரி 20 அன்று பாஜக-அஜித் இடையே ஒரு மெல்லிய கருத்து யுத்தம் நடந்தது. அதை இன்று பலர் மறந்திருக்கலாம். அன்று பாஜகவின் தலைவராக இருந்தவர், இன்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுனரான தமிழிசை. அன்றைய தினம் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக ஒரு செய்தி வெளியானது. 




அதே நிகழ்வில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், ‛‛திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்,’’ என கூறியிருந்தார். 


அவ்வளவு தான்.... ஒட்டுமொத்த ஊடகமும் பாஜக-அஜித் உறவை பந்தாடத் துவங்கியது. ஏற்கனவே அதிமுகவில் இணைகிறார் அஜித் என்று கூறி வந்த நிலையில், பாஜக பக்கம் செல்கிறாரா அஜித் என ஆருடம் மாறியது விவகாரம் ஒரு கட்டத்தில் எங்கோ சென்று கொண்டிருக்க, தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் மறுநாளான ஜனவரி 21ல் அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்...


‛‛என்‌ மீதோ, என்‌ ரசிகர்கள்‌ மீதோ, என்‌ ரசிகர்‌ இயக்கங்களின்‌ மீதோ எந்த விதமான அரசியல்‌ சாயமும்‌ வந்து விடக்கூடாது என்று நான்‌ சிந்தித்ததின்‌ சீரிய முடிவு அது. என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல்‌ நிகழ்வுகளுடன்‌ என்‌ பெயரையோ, என்‌ ரசிகர்கள்‌ பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள்‌ வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல்‌ வரும்‌ இந்த நேரத்தில்‌ இத்தகைய செய்திகள்‌ எனக்கு அரசியல்‌ ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொதுமக்கள்‌ இடையே விதைக்கும்‌.


இந்த தருணத்தில்‌ நான்‌ அனைவருக்கும்‌ தெரிவிக்க விழைவது என்னவென்றால்‌ எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில்‌ நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்‌கட்ட அரசியல்‌ தொடர்ப்பு. நான்‌ என்‌ ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்‌ என்றோ வாக்களியுங்கள்‌ என்றோ எப்பொழுதும்‌ நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும்‌ மாட்டேன்‌.


அரசியலில்‌ எனக்கும்‌ தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை தான்‌ யார்‌ மீதும்‌ திணிப்பது இல்லை. மற்றவர்கள்‌ கருத்தை என்‌ மேல்‌ திணிக்க விட்டதும்‌ இல்லை. என்‌ ரசிகர்களிடம்‌ இதையேதான்‌ நான்‌ எதிர்பார்க்கிறேன்‌. உங்கள்‌ அரசியல்‌ கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்‌. என்‌ பெயரோ, என்‌ புகைப்படமோ எத்த ஒரு அரசியல்‌ நிகழ்விலும்‌ இடம்‌ பெறுவதை நான்‌ சற்றும்‌ விரும்புவதில்லை.


எனது ரசிகர்களிடம்‌ எனது வேண்டுகோள் என்னவென்றால்‌ நான்‌ உங்களிடம்‌ எதிர்பார்ப்பது எல்லாம்‌, மாணவர்கள்‌ தங்களது கல்வியில்‌ கவனம்‌ செலுத்துவதும்‌, தொழில்‌ மற்றும்‌ பணியில்‌ உள்ளோர்‌ தங்களது கடமையை செவ்வனே செய்வதும்‌, சட்டம்‌ ஒழுங்கை மதித்து நடந்துக்‌ கொள்வதும்‌, ஆரோக்கியத்தின்‌ மீது கவனம்‌ வைப்பதும்‌,வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன்‌ இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதைசெலுத்துவதும்‌, ஆகியவை தான்‌. அதுவே நீங்கள்‌ எனக்கு செய்யும்‌ அன்பு. “வாழு வாழ விடு” என்று அந்த அறிக்கையில் அஜித் தனது கருத்தை தெரிவித்திருந்தார். 




அந்த அறிக்கையில் கூறியிருந்த ‛வாழு வாழ விடு’ என்கிற அந்த வார்த்தை தான், பாஜகவுக்கு எதிரான அஜித்தின் கருத்துக் கத்தி என்று பலரும் அப்போது கூறியிருந்தனர். அதன் பின் அஜித் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. தனது வலிமை படத்தில் ‛வாழு வழ விடு’ என்கிற வரிசை பாடுகிறார். அதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் புரிந்தவர்கள். மாஸ்க் போட்டு வரிசையில் வந்து ஓட்டளித்த அஜித், அவர் அணிந்திருந்த மாஸ்க் திமுகவின் கொடி நிறம் கொண்டது என பரபரப்பாக பேசப்பட்ட போது, அது பற்றி எந்த அறிக்கையும் அவர் விடவில்லை. ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. இப்போது மீண்டும் தனது படத்தில் வாழு வாழ விடு என்கிறார்.


   


இதில் ஏதோ அரசியல் பின்னணி இருக்கலாம் என்றே தெரிகிறது. பொதுவாக தனது படங்களில், தனது கருத்துக்கள் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார் அஜித். இப்போது அவர் கூறிய கருத்து, ஆண்டுகளை கடந்த பாடல் வரியில் வருகிறது. அதுவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வருகிறது. பாஜகவிற்கு எதிராக அன்று அஜித் கூறிய அதே வார்த்தை, இன்று மீண்டும் வருகிறது என்றால் அது சிந்திக்க வேண்டியதே. உண்மையில் அஜித் ஏதோ சொல்ல வருகிறார். பேச முற்படுகிறார். பேசுவார் என்றே தெரிகிறது. அது படத்தின் மூலமா அல்லது, நேரிலா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். உண்மையில் வலிமை... அஜித்தின் மன வலிமையை காட்டும் என்றே தெரிகிறது.