குமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் அரைகிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டத்தில் தங்க நகை கடையின் பூட்டை உடைத்து அரைகிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து மார்த்தாண்டம் போலீசார் தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா செல்வின்ராஜ். இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ காம்பிளக்சில் ரோஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடையை அடைத்து சென்றவர் இன்று கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 600 கிராம் எடையில் கொலுசு, கம்மல், மாலை, மோதிரம், செயின் ஒட்டியானம் என்ன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை டிஎஸ்பி கணேசன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளயடிக்கபட்டிருப்பது அப்பகுதியிலுள்ள வர்த்தகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்