இந்தியாவில் உள்ள அமுல் நிறுவனத்திடம் இருந்து பால்மாவை பெற இலங்கை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அமுல் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் இந்த பால் மாவை பெறும் திட்டமானது இந்திய கடன் உதவியின் கீழ் செயல்படுத்த எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட தலைமையில் அமுல் பால்மாவை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும் இலங்கை தூதர் உள்ளிட்ட குழுவினர் குஜராத் மாநிலத்தில் உள்ள அமுல் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று கலந்துரையாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய பால் உற்பத்தியில் 45 சதவீதம் அளவில் அமுல் நிறுவனம் பங்காற்றி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோதியை இலங்கை உயர்மட்ட அதிகாரிகளுக்கு குழு குஜராத்தில் சந்தித்ததாக இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்திருக்கிறது.அதேபோல் இலங்கைக்கு பால்மாவை கொள்வனவு செய்வது தொடர்பாக இந்திய கைத்தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இலங்கையிலேயே கால்நடை துறையை மேம்படுத்தி பால்மா உற்பத்தியை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவதற்கு தூதரக அதிகாரிகள் வழியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக இலங்கைக்கு பால் பாக்கட்டுகள் வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. குறிப்பிட்ட ஒரு சில கால்நடை பண்ணைகள் மாத்திரமே இலங்கையில் இருக்கின்றன.இருந்த போதும் அதிகளவாக வெளிநாடுகளில் இருந்தே பால் மா பக்கட்டுகள் கொள்வனவு செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது முற்று முழுதாக அங்கு பால்மா விற்பனை சரிவு கண்டுள்ளது. ஒரு பாக்கெட் பால்மா 3000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் அயல் நாடான இந்தியாவிடம் இருந்து பால் மாவை பெறுவதற்கு இலங்கை பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவே சொல்லப்படுகிறது.
இலங்கை மக்கள் அதிகளவாக பசும்பால் பயன்படுத்துவதை விட அதனை பால் மாவாகவே பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கும் இந்த பால் மாவையே வழங்கி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்