ரூ.51.42 லட்சம் மதிப்பிலான 1.15 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையம், உள்நாட்டு முனையம் உள்ளது. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் உள்நாட்டு விமானங்களையும், வெளிநாட்டு விமான சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இங்கு மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து பயணிகளையும் சில கட்ட சோதனைக்கு பிறகே விமானத்தில் ஏற அனுமதிப்பர். பயணிகளின் உடைமைகளையும் ஸ்கேன் கருவி கொண்டு அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.
விமானத்தில் கொண்டு செல்லக் கூடிய மற்றும் கொண்டு செல்லக் கூடாத பொருட்கள் பட்டியல் பயணச்சீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே ரொக்கமும் தங்கமும் எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் எடுத்துச் செல்ல வேண்டுமானால் உரிய ஆவணங்களும் தெளிவான காரணமும் இருக்க வேண்டும். அதுவும் சுங்க அதிகாரிகள் ஏற்பார்களா என்று தெரியாது.
விதிமுறைகளும், சோதனைகளும் இருந்தாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்கம், அரிய வகை உயிரினங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்ந்து விமானங்கள் வழியாக கடத்தி வரும் சம்பவங்களும் அதை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.
விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்து பிடிப்பட்ட நபர்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது படித்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்னை விமான நிலையத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் எம். மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவர் இன்று (07.11.2022) சோதனை செய்யப்பட்டார்.
அப்போது அவர் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
1962ம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் கீழ் 1.15 கிலோகிராம் எடையுடைய 51.42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த பயணி உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் மேத்யூ ஜாலி குறிப்பிட்டுள்ளார்.