கோவையில் கோவிலில் இருந்து திருடி நடராஜர் உலோகச் சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவரை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் எனக்கூறி, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப் படையினர் கோவையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தகவலாளி ஒருவர் மூலமாக சிலையை விற்பனை செய்பவர்களிடம் காவல் துறையினர் சிலை வாங்குபவர்கள் போல பேசி, சிலையை கோவைக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளனர். இதன்படி நேற்று அதிகாலையில் கோவை - பல்லடம் சாலையில் இருகூர் பிரிவு என்ற இடத்தில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் காத்திருந்தனர். அப்போது அவர்கள் சொன்ன அடையாளத்துடன் வந்த கேரள பதிவெண் கொண்ட காரில் வந்தவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் காரில் சோதனை மேற்கொண்ட போது, காரின் பின்னால் டிக்கியில் வெள்ளை நிற சாக்கு பையில் சுருட்டிய நிலையில் சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காரை ஓட்டி வந்தவர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் (22) என்பதும், அவருடன் இருந்த மற்றொரு நபர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவபிரசாத் நம்பூதிரி என்பதும் தெரியவந்தது. சிலையைப் பற்றி அவர்களிடம் விசாரித்த போது நடராஜர் உலோகச் சிலையை காரில் கொண்டு வந்ததற்கு உரிய காரணம் சொல்லாமல், முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனர். இதனால் நடராஜர் உலோகச் சிலையை ஒரு பழமையான கோவிலில் இருந்து திருடி, சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்ய காரில் எடுத்து வந்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நடராஜர் உலோகச் சிலை மற்றும் காரினை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜர் சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்தும், கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்தும், இதேபோல கோவில் சிலைகளை திருடி விற்பனை செய்துள்ளார்களா என்பது குறித்தும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்