திண்டுக்கல் - மதுரை சாலையில் நேற்று காலை தோமையார்புரம் குப்பை கிடங்கு அருகே  கண்கள், கை, கால்கள்  கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு தனியார் வங்கி ஊழியர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் நேற்று காலை கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முதற்கட்ட விசாரணை தொடங்கினார். மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தாலுகா காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்து வந்தனர்.


Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!


கொலை செய்யப்பட்டவர் குறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், திண்டுக்கல் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகன் மகன் பாலமுருகன் வயது 39 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு வசதி கடன் பிரிவில் வேலை பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது. இவர் மூன்று மாத காலங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து பணியில் இருந்து விலகி விட்டதாகவும் தெரியவந்தது.




இந்த நிலையில் பாலமுருகனை 3 தினங்களாக காணவில்லை என அவரது தந்தை அழகன் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கொலை எதனால் நடந்தது என தெரியாமல் இருந்தது. இதனை அடுத்து புறநகர் டி.எஸ்.பி சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.




இந்த கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த 8 பேரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த இருதயராஜா மகன் ஜஸ்டின் ராஜா (வயது 28), மேட்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணி மகன் லியோ சார்லஸ் (வயது 34), சார்லஸ் சகோதரர் பன்னீர்செல்வம் (வயது 28), ஆர்.எம் காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் முத்துக்குமார் (வயது 48), ஆர்ஆர் நகரைச் சேர்ந்த தான்தோன்றி மகன் கார்த்திக்குமார் (வயது 46) வடமதுரை, காப்பிலியபட்டியைச் சேர்ந்த மணியன் மகன் திருப்பதி (வயது 35), கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த வெங்குடுசாமி மகன் விக்னேஷ் (வயது 32) ஆகியோர் 7 பேரை கைது செய்துள்ளனர்.


"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!


கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் காரணமாக பாலமுருகனை கடத்திச்சென்று 3 நாட்கள் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட 7 நபர்களும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்