மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணத்தை திருடுவதற்கு முன்பு, அங்கிருக்கும் சாமி படத்தின் முன்பு நின்று திருடர் சாமி கும்பிட்ட சம்பவம் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.


வீடுகள், கடைகள் தொடங்கி பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு திருடரும் ஒவ்வொரு பாணியை கையாள்வார். ஒரு சிலர், திருட வேண்டிய இடத்தில் சீக்கிரமாக திருடிவிட்டு தப்பித்து செல்ல வேண்டும் என எண்ணுவர்.


பெட்ரோல் பங்கில் வேலையை காட்டிய திருடர்:


ஒரு சில திருடர்கள், வீட்டில் திருடிவிட்டு அங்கிருக்கும் உணவை எல்லாம் பொறுமையாக சாப்பிட்டுவிட்டு எல்லாம் செல்வார்கள். சில சமயம், இப்படிப்பட்ட திருடர்கள் சிக்குவது உண்டு. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் திருடர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் நகைப்பில் தள்ளியுள்ளது.


மச்சல்பூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு பணத்தை திருடுவதற்காக வந்த திருடர், பணத்தை திருடுவதற்கு முன்பு அங்கிருக்கும் சாமி படத்தின் முன்பு நின்று சாமி கும்பிட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.


பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் நடந்த சம்பவம் அனைத்தும் பதிவாகியுள்ளது. நீல நிற ஜாக்கெட் அணிந்திருக்கும் நபர் ஒருவர், இரவில் பெட்ரோல் பங்கில் நுழைவதை சிசிடிவியில் காணலாம். அங்கு சாமி அறையை பார்த்த அவர் அங்கு நின்று, சாமி படத்தின் முன் வணங்கி ஆசி பெறுவதை பார்க்கலாம்.


நடந்தது என்ன?


பின்னர், பணப்பெட்டியில் உள்ள பணத்தை எடுக்க அவர் முயற்சித்ததும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சில நிமிடங்களில், அவர் சிசிடிவி கேமராவைப் பார்க்கிறார். அதை நிறுத்த முயல்கிறார். ஆனால், அவரால் சிசிடிவி கேமராவை நிறுத்த முடியவில்லை. கொள்ளையடித்த பின், திருடர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.


 






இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "பெட்ரோல் பங்கில் 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது, ​​பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அங்கேயே தூங்கிக் கொண்டிருந்தனர். தூங்கி கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் எழுந்து திருடனைப் பின்தொடர்ந்து ஓடியும் அவரைப் பிடிக்க முடியவில்லை" என்றார்.


இதையும் படிக்க: Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?