அரசியல் கருத்துகள் பேச வேண்டாம் என்று தான் சொல்லி அனுப்பியும் அதனை துளியும் கேட்காமல், விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுகவை சரமாரியாக தாக்கி பேசிய ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
திரும்ப, திரும்ப பேசுற நீ – கொதிக்கும் நிர்வாகிகள்
ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனமும் விகடன் குழுமமும் நடத்திய அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக போடும் கூட்டணி கணக்குகளை மைனஸ் ஆக்குவோம் என்று பேசியதும், மன்னராட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் திமுக தலைமையை கொதிப்பேற்றியுள்ளது.
திமுக கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசக் கூடாது என்று அவருக்கு திருமாவளவன் ஏற்கனவே அறிவுறுத்திய நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் கருத்துகளை பேச வேண்டாம் என்று சொல்லி அனுப்பிய நிலையிலும், தலைமையின் பேச்சை கேட்காமல் தான் தோன்றிதனமாக ஆதவ் அர்ஜூனா மீண்டும், மீண்டும் திமுகவை விமர்சித்து பேசி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் திருமாவளவனுக்கு உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே, பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் திமுகவையும் கூட்டணியையும் ஆதவ் அர்ஜூனா விமர்சித்து பேசிய நிலையில், அவரை கொஞ்சம் வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள் என்று விசிக நிர்வாகிகள் திருமாவளவன் மூலம் அறிவுறுத்தி வந்தனர். ஆனால், அதையெல்லாம் கேட்காமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி, தன்னுடைய தனிப்பட்ட பிரபல்யத்திற்காகவும் சுய அரசியல் லாபத்திற்காகவும் ஆதவ் அர்ஜூனா செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திமுகவினர் கருதி, அவருக்கு எதிராக திருமா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீக்கமா ? தற்காலிக நீக்கமா ? விரைவில் திருமா அறிவிப்பு
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் என்ன விளக்கம் அளித்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவில் திருமாவளவன் இருப்பதால், விரைவில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்கியோ அல்லது தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டோ விரைவில் அறிவிப்பு வரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் கட்சியில் ஐக்கியமாகும் ஆதவ் ?
தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று சேர ஆதவ் அர்ஜூனா முடிவு செய்திருப்பதாகவும், அந்த கட்சியில் தனக்கு துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்காக பணியாற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
அதே நேரத்தில் சமீபத்தில் ஒரு வார இதழில் விஜய் கட்சி பற்றி பாசிட்வான ஒரு சர்வே வெளியானது. இதனையும் ஆதவ் அர்ஜூனாவே வர வைத்து கொடுத்ததாகவும், மேலவளவில் சாதி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து விஜயை சந்திக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.