இப்போதெல்லாம் கார் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளும், சேதங்களும் மிரளவைக்கிறது. அந்த வகையில், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை அமராவதி, அப்பள்ளி வளாகத்தில் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 44.
தர்மபுரி வெண்ணாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அமராவதி (வயது 44).கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சக்திவேல் கும்பகோணத்தில் மாவட்ட ஆட்சியாளாராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு, தான் பணி செய்யும் போச்சம்பள்ளிக்கு தினமும் சென்றுவர புது காரை ஒன்றை அமராவதி வாங்கியுள்ளார். இதற்காக, ஓட்டுனர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து ஆசிரியை அமராவதி வெளியே வந்தார். அப்போது கார் டிரைவர் கடைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் வரும்வரை காரை ஓட்டிப் பழகலாம் என்று திட்டமிட்ட அவர், காரை இயக்கத் தொடங்கினார். காரை ஓட்டிய முன் அனுபவம் இல்லாத காரணத்தினால், பிரேக்குக்கு பதிலாக கிளட்சை அழுத்தி விட்டார். கனநேரத்தில் சீறிபாய்ந்த கார்,பள்ளி கட்டிட சுவர் மீது வேகமாக மோதியது. இதில் ஆசிரியை அமராவதி, பலத்த காயம் அடைந்தார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த சக பள்ளி ஆசிரியர்கள், அமராவதியை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேச்சாம்பள்ளி ஊர் பொது மக்களும், உடன் பணிபுரிந்த சக ஆசிரியர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி காவல்துறை அதிகாரி பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க:
தருமபுரியில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் விடுதிகளில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்