ஜார்கண்ட்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட நீதிபதி கடந்தாண்டு ஜூலை 28 ஆம் தேதி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது அவர் மீது ஆட்டோ ரிக்ஷா மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நீதிபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது இந்த விபத்து செயற்கையாக நடப்பது போல தெரிந்தது. இதுதொடர்பாக தன்பாத் காவல்துறை உள்ளூரைச் சேர்ந்த இருவரை கைது செய்தது. அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஜார்க்கண்ட் அரசு உடனடியாக வழக்கை சிபிஐக்கு மாற்றியது. சம்பந்தப்பட்ட ஆட்டோ தன்பாத்தில் திருடப்பட்டது என தெரிய வந்தது. அந்த ஆட்டோ அண்டை மாவட்டமான கிரிதிஹ் மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராகுல் குமார் வர்மா மீது கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மற்றொரு குற்றவாளி லகான் வர்மா நீதிபதி உத்தம் ஆனந்தை கொலை செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரஜினிகாந்த் பதக், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் ஐபிசியின் 302, 201 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்