விசாகப்பட்டினம் கடற்கரையில் செல்ஃபி எடுக்கும் போது காணாமல்போன இளம்பெண் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

செல்ஃபி புகைப்படங்கள் மீதான மோகத்தால் சமீபகாலமாக உயிர்பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆபத்தான இடங்களில், நேரங்களில் எச்சரிக்கையும் மீறி இதில் ஈடுபடுவது கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்ரையில் இப்படியான ஒரு விபரீத சம்பவம் நடந்ததாக அனைவரும் நினைத்த நிலையில் இந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அங்குள்ள என்ஏடி கோத்தா சாலையில் வசிக்கும் பிரியா என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா கடற்கரையில் தனது கணவர் ஸ்ரீனிவாஸ் உடன் 2-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாட கடந்த ஜூலை 25 ஆம் தேதி சென்றுள்ளார். கடற்கரையில் நின்று இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது ஸ்ரீனிவாஸ்  செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர் அங்கிருந்து சிறிது தூரம் தள்ளிவந்து செல்போன் பேசியுள்ளார். பின் மீண்டும் மனைவியை காண சென்றபோது பிரியா அந்த இடத்தில் இல்லாததை கண்டு ஸ்ரீனிவாஸ் திடுக்கிட்டார். 

ஒருவேளை கடலில் அலை இழுத்துக்கொண்டு போயிருக்குமோ என பயந்து கடற்படை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். மறுநாள் காலையில் படகுகள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பெண் பற்றி எந்த அறிகுறியும் தென்படாததால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதற்கிடையில் 2 தினங்கள் கழித்து நேற்று பிரியா நெல்லூரில் தனது காதலுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதாவது விசாகப்பட்டினம் சஞ்சீவய்யா நகரைச் சேர்ந்த பிரியாவுக்கும், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் பிரியா திருமணத்திற்கு முன் ரவி என்பவரை காதலித்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் அதனைத் தொடர்ந்துள்ளார். இதனிடையே ஸ்ரீனிவாஸ் பணி காரணமாக ஐதரபாத்தில் பிரியாவுடன் குடியேறியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் தான் விசாகப்பட்டினத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்தே தனது காதலுடன் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் பிரியாவை தேட கடற்படை  நிர்வாகம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், பல அரசு துறைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரியாவை நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் அழைத்து வந்து விசாரணை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண