தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர். இவருடைய மகன் காபில் 22 வயதே ஆன இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார். காபில், அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் (19) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் காபில் பணத்தை திருப்பிதருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
CM Stalin: சிங்கப்பூர் அதிரபரான தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
இந்தநிலையில் நேற்று இரவு காபில், முகமது சமீரை தொடர்பு கொண்டு கடனை திருப்பி தருவதாகவும், சின்னமனூர் வண்டிப்பேட்டை அருகில் சி.எஸ்.ஐ. பள்ளி தெருவுக்கு வருமாறும் கூறியுள்ளார். இதையடுத்து முகமது சமீர், தனது அக்காள் கணவரான சின்னமனூரை சேர்ந்த அலாவுதீனுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது காபில் பணத்தை கொடுக்காமல் முகமது சமீருடன் தகராறு செய்தார். மேலும் அவரை தாக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த முகமது சமீரும், அலாவுதீனும் சேர்ந்து காபிலை கத்தியால் சரமாரியாக குத்தினர். அப்போது நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சின்னமனூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காபிலை கத்தியால் குத்திய முகமது சமீர் மற்றும் அலாவுதீனை போலீசார் தேடினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னமனூரில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.