கடந்த ஆகஸ்ட் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1. 59 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, கடந்த மாதம் வசூல் செய்த தொகையை விட 11 சதவிகிதம் அதிகம். நாட்டில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வசூல் செய்யப்பட்ட அதிக தொகை 1.87 லட்சம் கோடி ரூபாயாகும். 


11 சதவிகிதம் அதிகரித்த ஜிஎஸ்டி வரி வசூல்:


மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 1,59,069 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய ஜிஎஸ்டி ரூ 28,328 கோடி ஆகும். மாநில ஜிஎஸ்டி ரூ 35,794 கோடி ஆகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 83,251 கோடி (ரூ. 43,550 கோடி வசூல் மற்றும் பொருட்களின் இறக்குமதியில் வசூலிக்கப்பட்டது) ஆகும். செஸ் வரியாக ரூ.11,695 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 1,016 கோடி உட்பட) வசூலிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாயை விட 11 சதவீதம் அதிகமாக இந்த மாதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில், சரக்குகளை இறக்குமதி செய்ததன் மூலம் 3 சதவீதம் வருவாய்  அதிகமாக கிடைத்துள்ளது.


உள்நாட்டு பரிவர்த்தனைகள் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 14 சதவீதம் அதிகமாகும்" என குறிப்பிட்டுள்ளது.


 






இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், "ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரி விகிதங்கள் அதிகரிக்கப்படாவிட்டாலும், ஜிஎஸ்டி வசூல் பெயரளவிலான ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக வளர்ந்துள்ளது. வரி வசூல் மேம்பட்டதாலும் விதிகளை பின்பற்றி அதிகரித்ததாலும் வசூலில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்வது, வரியை செலுத்தாமல் தவிர்ப்பது ஆகியவையும் குறைவாகவே உள்ளது" என்றார்.


கடந்த மூன்று நிதியாண்டுகளாக ஜிஎஸ்டி வசூல் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2022 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 1.10 லட்சம் கோடி ரூபாயாகும். 


கடந்த 2023 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 1.51 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த 24 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 1.69 லட்சம் கோடி ரூபாயாகும்.