ஓபிஎஸ் அணி சார்பாக நாளை நடக்கவுள்ள புரட்சி பயணத் தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் உட்கட்சி பூசல்
காஞ்சிபுரம் (Kanchipuram News): அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சருமான, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதலமைச்சர் பதவியை ஏற்றார் ஓபிஎஸ். அதன் பிறகு முதலமைச்சராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பதவியை ஏற்க இருந்தார். இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில், அவர் தண்டனை பெறவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே ஓபிஎஸ் அதிமுகவை மீட்டெடுக்க தர்ம யுத்தமும் மேற்கொண்டார்.
ஒற்றைத் தலைமை பிரச்சினை
ஒரு கட்டத்தில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைப்பற்றுவதில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இபிஎஸ் அணி சார்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஓபிஎஸ் புரட்சி பயணம்
இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ' புரட்சித்தலைவி அம்மா பாதையில் புரட்சி பயண தொடக்க விழா ' பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த கலியனூர் பகுதியில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் ஓபிஎஸ் அணி அரசியல் ஆலோசகர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் தமிழக முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிலையில் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற வடிவில் மேடை மற்றும் மேடையில் இருந்து நடந்து சென்று தொண்டர்களை பார்க்கும் வகையில் 500 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாது எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் ஓபிஎஸ் அவர்களின் முழு உருவ கட்டவுட்களும் அமைக்கப்பட்டு பத்தாயிரம் பேர் அமர்ந்து பொதுக்கூட்டத்தை பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலாளர் ஆர்.வி. ரஞ்சித் குமார் தெரிவித்தார்.
ஓபிஎஸ் முடிவு என்ன ?
நீதிமன்றத்தில் தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்ததால், அடுத்த கட்ட நகர்வு குறித்து ஓபிஎஸ் இந்த கூட்டத்தில் அறிவிக்க உள்ளார். ஒருபுறம் சட்டை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தாலும், அரசியல் ரீதியான முன்னெடுப்பு தான் அதிமுகவை மீட்டெடுக்க முடியும் என ஓபிஎஸ் அணியினர் கருதுகின்றனர். அரசியல் ரீதியான முன்னெடுப்பு மட்டுமே, வெற்றியை அளிக்கும் என ஓபிஎஸ் தரப்பு கருதுவதால், காஞ்சிபுரத்தில் அரசியல் ரீதியான நகர்வு குறித்து ஓபிஎஸ் அறிவிக்க வாய்ப்புள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த சுற்றுப்பயணம் என்பது, எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு உள்ள வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.