Crime : காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக அவர்களுக்கு தெரிந்த நபர்களே தான் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ளது.
ஒருதலைக் காதல்
கர்நாடக மாநிலம் ராமநாகரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமத் (22). இவர் அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த சிறுமியிடம் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறுமிக்கும் அந்த நபருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதனால் கடும் கோபமடைந்த அந்த இளைஞர் சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு 17 சிறுமியானது தனது சகோதரருடன் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் சிறுமியை வழிமறித்தார். பின்னர், மீண்டும் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். காதலிக்க சிறுமி மறுத்த ஆத்திரத்தில் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சிறுமியின் முகத்தில் வீசினார். பின்னர், அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார்.
சிறுமி மீது ஆசிட் வீச்சு
இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் சிறுமியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுமியின் முகம், கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் அந்த சிறுமியை நேரில் சந்தித்தார். பின்னர், இதுகுறித்து அவர் கூறியதாவது, ”இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் கூறினார்.
மேலும், 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய சுமத் என்பவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்
அசாம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், 30 வயதான பாதிக்கப்பட்ட பெண், தெகியாஜூகியில் உள்ள ராக்யாஸ்மாரி என்ற இடத்தில் உள்ள ஒரு சாலையில் வேலை முடிந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அருகிலிருந்த தேயிலை தோட்டத்தில் இருந்து ஒரு இளைஞர் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு வழி மறித்துள்ளார். அந்த பெண் வாகனத்தை நிறுத்தாததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பெண்ணின் மீது ஆசிட் வீசியுள்ளார். பின்னர், குற்றாவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.