Crime: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் மீது டிராக்டரை 8 முறை ஏற்றி கொலை செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பகீர் வீடியோ:
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிலம் தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், இரு குடும்பங்களும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு நீதிமன்றம் வரை பிரச்னை சென்றது. இந்நிலையில், தான் நேற்று இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த பிரச்சினையில் நிர்பத் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், 5 பேருக்கும் மேற்பட்டார் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தகராறு நீடித்த நிலையில், அது கைகலப்பாக மாறியது.
இதில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இருக்கும்போது, நிர்பத் என்பவர் கீழே விழுந்தார். அப்போது, இவரது சகோதரர் தாமோதர் அருகில் இருந்த டிராக்டரில் ஏறி அதனை ஓட்டி இருக்கிறார். அதுவும், நிர்பத் மீது 8 முறை ஏற்றி இருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோதும், தாமோதர் டிராக்டரை நிறுத்தாமல், நிர்பத் மீது தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே நிர்பத் பரிதாபமாக உயிரிழந்தார்.
என்ன காரணம்?
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பகதூர் சிங். அதே பகுதியைச் சேர்ந்தவர் அதர் சிங். இந்த இரண்டு குடும்பங்களுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை பகதூர் சிங்கின் குடும்பத்தினர் அந்த நிலத்தில் டிராக்டரில் வந்திருக்கின்றனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அதர் சிங்கின் குடும்பத்தினரும் அங்கு வந்தடைந்தனர்.
அப்போது, இரண்டு குடும்பங்களுக்கு நிலம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சிறிது நேரத்திற்கு சண்டையாக மாறியது. அப்போது, இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தான், அதர் சிங்கின் மகன் நிர்பத் தரையில் விழுந்திருக்கிறார். அப்போது, அவரது சகோதரர் தாமோதர் டிராக்டரை அவர் மீது 8 முறை ஏற்றி கொலை செய்திருக்கிறார்.
மேலும், இந்த தகராறில் 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸை, எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர்.
மேலும் படிக்க