அமெரிக்காவின் மெய்னே மாகாணம் லூயிஸ்டன் பகுதியில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 முதல் 60 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மூன்று (Schemengees Bar and Grille Restaurant, a Walmart store and Sparetime Recreation) இடங்களில் நடைபெற்றுள்ளது.
ஆண்ட்ரோஸ்கோகின் கவுண்டி பகுதியின் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், "ஆண்ட்ரோஸ்கோகின் கவுண்டியில் உள்ள சட்ட அமலாக்கப் பிரிவு இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளை விசாரித்து வருகிறது. விசாரணை நடைபெறும் வேளையில் அப்பகுதியில் இருக்கும் கடைகளை மூட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார்,” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மர்ம நபர் தலைமறைவாக இருக்கும் நிலையில் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நபர் சக்திவாய்ந்த துப்பாக்கியை வைத்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஜானட் மில்ஸ், “லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து நான் அறிந்தேன். அது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் உள்ளூர் அமலாக்கத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து பொது பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பேன்” என கூறியுள்ளார். மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு விளக்கமளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையின் தகவல்களின்படி, இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.