உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அணி தோல்வி கண்ட நிலையில், முன்னாள் வீரர் முகமது யுசுஃப் முக்கிய தகவல் ஒன்ற வெளியிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கியது. இதுவரை இல்லாத வகையில் மூத்த அணிகள் சொதப்ப, கத்துக்குட்டி அணிகள் எல்லாம் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியது போல மிரட்டி வருகிறது. அப்படி ஒரு போட்டி தான் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாகவே விளையாடியது. கேப்டன் பாபர் அசாம் அதிகப்பட்சமாக 74 ரன்கள் விளாச அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சென்னை மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றி பெறுவது கடினம் என சொல்லப்படும் நிலையில் அசால்ட்டாக ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது.
அந்த அணியை பற்றி தவறாக கணித்ததே பாகிஸ்தான் அணி தோல்வியடைய காரணமாக அமைந்தது. தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என சொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அஃப்ரிடி பந்துவீச்சை எல்லாம் துவம்சம் செய்தனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள். அந்த அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. முன்னதாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருந்தது. ஒரே உலகக்கோப்பையில் முதல்முறையாக 2 போட்டியில் வெற்றி பெற்ற பெருமையையும் ஆப்கானிஸ்தான் பெற்றது.
பாகிஸ்தான் அணியின் தோல்வியை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருவதால் அந்த அணி வீரர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த தோல்விக்கு கேப்டன் பாபர் அசாமின் தவறான கேப்டன்சி காரணம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பாபர் அசாமுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு ஓய்வறையில் கேப்டன் பாபர் அசாம் கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மட்டும் இந்த தோல்விக்கு காரணம் அல்ல,ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி வீரர்களும், நிர்வாகமும் தான் என விமர்சித்துள்ளார். கடினமான நேரங்களில் நாம் பாபர் அசாமுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.