Crime : மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நம் ஊர்களில் பொதுவாக திருமணத்தை அனைவரும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடத்தப்படும். அப்படி இருக்கும் சூழலில் திருமணத்திற்காக பெண்கள் அவர்களை அழகான தோற்றத்தில் இருக்க பலவிதமான யுக்திகளை பயன்படுத்துவார்கள். இந்த காலத்தில் திருமணம் என்றாலே மேக்கப், போடோகிராஃப்தான் முக்கியமாக கருதப்படுகிறது.


பெண்கள் திருமண மேக்கப்பிற்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து தங்களை அழகுப்படுத்தி கொள்வார்கள். இப்படி இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  திருமணத்திற்கு வித்தியாசமாக மேக்கப் போட வேண்டும் என்று எண்ணி மணப்பெண் புது யுக்தியை பயன்படுத்தியதால் அவரது முகம் பாதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேக்கப் போட்ட மணப்பெண்


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரிசிகெரேவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், இளைஞருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் மார்ச் 2ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் மணப்பெண் மேக்கப் போட முடிவு செய்தார்.


அரிசிகெரே என்ற பகுதியில் உள்ள கங்கா என்பவருக்கு சொந்தமான அழகு நிலையத்திற்கு சென்றார். அங்கு மணப்பெண்ணுக்கு கங்கா மேக்கப் போட்டு அழகுப்படுத்தினார்.  புதிய வகை கிரீமை பயன்படுத்தி மணப்பெண் முகத்திற்கு மேக்கப் போட்டுள்ளார்.  மேக்கப் கலைந்து விடக்கூடாது என்பதற்காக சுடு தண்ணீராலான நீராவியில் ஸ்டீம் செய்துள்ளார். 


திருமணத்தை நிறுத்திய மணமகன்


சுடு தண்ணீர் ஆவி பிடித்ததால் மணப்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியது. மேலும் முகம் வெந்து கொப்பளங்கள் வந்ததுடன் கண்கள், கன்னமும் வீங்கியது.  மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்தை மணமகன் வீட்டார்கள் நிறுத்தினர். இதனால் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.


பின்னர், அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மணப்பெண்ணின் குடும்பத்தினர் அழகு நிலைய உரிமையாளர் கங்கா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்ற சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Stalin Jacob : 'What a Karwad' துணை நிறுவனரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..