சாமித்தோப்பு அய்யா வைகுண்டரின் 191வது அவதார தின விழாவை முன்னிட்டு இன்று வாகன பவனி புறப்படுகிறது. இதனையொட்டி இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அய்யா வைகுண்டசாமி அவதார தினம்


கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த இடத்தில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதியை, சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்றைய தினத்தை வைகுண்டரின் 191ஆவது அவதார தினமாக கொண்டாடுகின்றனர். அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி அய்யா வழி மக்கள் பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு வந்து அருள் பெற்றுச் செல்வது வழக்கம். இதனால் அய்யா வைகுண்டர் சாமி அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பை, மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.



தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறை


தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அய்யா வழி பக்தர்கள் மட்டும் இந்த தினத்தில் சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். இந்த 4 மாவட்ட விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே அறிவித்துள்ளனர். இந்த உள்ளூர் விடுமுறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும்  பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அய்யா வைகுண்டர் சாமி அவதார தினத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்குமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Stalin Jacob : 'What a Karwad' துணை நிறுவனரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..


என்ன செய்தார் வைகுண்டர்?


சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவராக அறியப்படுபவர் அய்யா வைகுண்டர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர்தான் வைகுண்டர்.  தனது சொந்த செலவில் சாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றை நிறுவி, பொதுமக்கள் அனைவரும் சாதிய பாகுபாடின்றி அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.



விழா நடைபெறுவது எப்படி?


சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளை இணைத்த அவதாரமாக அய்யா வைகுண்டரை, அவர் வழியை பின்பற்றும் மக்கள் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் இந்த தினத்தில், திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சாமிதோப்பை நோக்கி அய்யா வழி பக்தர்கள், வாகன பவனியாக வந்து கலந்து கொள்வது வழக்கம். இந்த வருட வாகன பவனி நேற்று காலை தொடங்கியது. இதற்கிடையே இன்று மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஆதலவிளை வைகுண்ட மாமலையில் வைகுண்ட தீபம் ஏற்றப்படும். திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பவனி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடையும். இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடைபயணமாக வரும் பக்தர்கள் இன்றிரவு நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலை வந்தடைவார்கள். பின்னர் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் இரவு 7 மணிக்கு அய்யா வழி சமய மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டுக்கு பால.ஜனாதிபதி தலைமை தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு அய்யா வழி அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள்.