Crime : நடிகை நக்மாவின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நக்மா. முதன் முதலில் தனது ஆக்டிங் கெரியரை பாலிவுட்டில் தொடங்கிய நக்மாவிற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு 1994 ஆம் ஆண்டு வெளியான  'காதலன்' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். முதல் படத்திலேயே நக்மாவை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கி விட்டார்கள் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,  போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 


பணம் பறிப்பு


இந்நிலையில், நடிகை நக்மாவின் செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இருந்த லிங்க்கை நடிகை நக்மா கிளிக் செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என்று முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டார்.  இதனை அடுத்து அந்த நபர் வங்கி கணக்கின் கேஓய்சியை புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99,998 மர்ம நபர் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நக்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


இதுகுறித்து நடிகை நக்மா கூறுகையில், "எனது செல்போன் எண்ணுக்கு வந்த லிங்கில் கேட்கப்பட்டு இருந்த விவரங்களை நான் பகிரவில்லை. இருந்தாலும் கேஓய்சியை புதுப்பித்து தருவதாக கூறிய நபர், எனது ஆன்லைன் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளார். நான் அந்த நபரிடம் எந்த விவரத்தையும் பகிரவில்லை இருந்தாலும் எப்படி பணம் பறிபோனது என்பது தெரியவில்லை. எனது செல்போனுக்கு 20-க்கும் மேற்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டுகள் வந்தன” என்று கூறினார்.


கடந்த சில நாட்களாகவே மும்பையில் மட்டும் பல லட்ச ரூபாய் 80 பேரின் வங்கி கணக்கில் இதுபோன்ற யுக்தியை பயன்படுத்தி பணத்தை அபேஸ் செய்துள்ளனர். மோசடியால் பாதிக்கப்பட்ட 80 பேரில் நடிகை நக்மா ஒருவர்.


மோசடி


இதுபோன்ற மோசடி மட்டுமில்லாமல், ஆதார் எண்ணை அப்டேட் செய்வது, பான் கார்டை இணைப்பது, உங்கள் மொபைல் எண் தவறுதலாக உள்ளது, பரிசு வந்துள்ளது, பார்சல் வந்துள்ளது, மின் கட்டணம் பாக்கி, வெளிநாட்டில் வேலை, ஜி-பே, யூபிஐ பின் என பல வழிகளில் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்கு பல லிங்க்குகள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படுகின்றன. அதை கிளிக் செய்த சில நிமிடங்களில் வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Cyber Crime: மக்களே உஷார்.. ஜி-பே மூலம் நூதன மோசடி.. தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை..!