தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நகை பாலிஷ் போடும் கடையில் இருந்து நகைகளை திருடிய சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கரிகாலனிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை பாலிஷ் செய்வதற்காக கொடுத்து வைத்திருந்தனர். இந்நிலையில் கரிகாலன் மற்றும் ராஜா இருவரும் கடந்த 4ம் தேதி இரவு வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் 5ம் தேதி காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் வாடிக்கையாளர்கள் பாலிஷ் செய்வதற்காக கொடுத்திருந்த 30 கிராம் தங்க நகைகள், மற்றும் 20 வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.





இதனால் அதிர்ச்சியடைந்த கரிகாலன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடையின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத் உத்தரவின்படி, கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மேற்பார்வையில், தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் தலைமையில் எஸ்எஸ்ஐக்கள் சுபாஷ், ராஜா, செல்வகுமார், தலைமை ஏட்டுகள் கதிஷ்,  பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, சண்முகசுந்தரம், செந்தில்குமார், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து கும்பகோணம், காரைக்கால், திருச்சி ஆகிய பகுதிகளில் கொள்ளையர்களை தேடினர் வந்தனர்.





மேலும் கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாக முயன்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில் மேற்படி கொள்ளையில் ஈடுபட்டது திருச்சி மாநகரம் குட்செட் ரோடு பகுதி செபாஸ்தியார் கோயில் தெருவை சேர்ந்த நெப்போலியன் மகன் ஜான் போஸ் (37), திருச்சி அடைக்கல மாதா தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் முருகவேல் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அந்த இருவரையும் போலீசார் திருச்சியில் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 55 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.