தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) தமிழ்நாட்டை போன்ற தேர்வுகள் வைத்து அரசு பணிசார்ந்த துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும்.  இந்தநிலையில், நேற்று நடைபெறவிருந்த எழுத்து தேர்வை டிஎஸ்பிஎஸ்சி கடந்த சனிக்கிழமை ஒத்திவைத்தது. 


காரணம் என்னவென்றால் நகர திட்டமிடல் கட்டிட மேற்பார்வையாளர் பதவிக்கு நடைபெறவிருந்த தேர்வின் வினாத்தாள் ஆன்லைன் மூலம் கசிந்ததாகவும், ஆன்லைனில் வினாத்தாள் ஹேக் செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக டிஎஸ்பிஎஸ்சி தனித்தனியாக தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பியது. தொடர்ந்து பேகம் பஜார் காவல் நிலையத்தில் வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


இந்தநிலையில், தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நகரத் திட்டமிடல் கட்டிடக் கண்காணிப்பாளருக்கான தேர்வு வினாத்தாளை லீக் செய்ததாக கூறப்படும் 10 பேரை பேகம் பஜார் காவல்துறையினர் கைது செய்தனர்.


சிக்கிய குற்றவாளிகள்:


இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக டிஎஸ்பிஎஸ்சி தலைவர் அனிதா ராமச்சந்திரனின் தனி உதவியாளர் பிரவீன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியை ரேணுகாவிடம் வினாத்தாளை பிரவீன் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிந்தவர்கள் என்றும், தேர்வுக்கு வரும் உறவினருக்கு தாள் தேவைப்பட்டதால் ஆசிரியர் ரேணுகா பிரவீனின் உதவியை நாடியதாகவும் தெரிகிறது.   


இதையடுத்து, டிஎஸ்பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்து சக ஊழியர்கள் உதவியுடன் பேப்பரைப் பெற்று ரேணுகாவிடம் கொடுத்துள்ளார் பிரவீன். அதை வாங்கிய ஆசிரியர் ரேணுகாவும் பணத்திற்கு ஆசைப்பட்டு அதை வாரங்கலில் சிலருக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி அளித்த பேட்டி ஒன்றில், “ வினாத்தாள் லீக்கானது தொடர்பாக எங்களிடம் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில், இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக மேலும் சில பேர் மீது  சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்தார். 


வினாத்தாள் லீக்கானது என்ற தகவல் அறிந்ததும், ஆன்லைன் ஹேக்கிங் சந்தேகத்தின் பேரில், TSPSC தேர்வை ஒத்திவைத்தது மற்றும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான தேர்வையும் ஒத்திவைத்தது.