கோடை வந்துவிட்டால் உடல் சோர்வும் வெயிலால் வரும். அப்போது வறண்டபோகும் நாவுக்கு இதமான பானத்தை உடல் நாடும். சந்தையில் ரெடிமேட் பானங்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும் பாரம்பரியமான சில பானங்கள் வெயில் சோர்வை தடுப்பதோடு உடலுக்கு புத்துணர்ச்சியும் தரும். அதிலும் லெமன் ஜூஸ், லஸ்ஸி போன்ற பானங்கள் எல்லாம் எளிதில் வீட்டிலேயே செய்யக்கூடியவை.


லஸ்ஸி வட இந்தியாவின் பாரம்பரிய பானம் என்றாலும் கூட அதுவும் குறிப்பாக பஞ்சாபி பானம் என்றாலும் கூட இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. பிரபல பால் நிறுவனமான அமுல் கூட லஸ்ஸியை டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்கிறது.


எத்தனை இருந்தாலும் வீட்டிலேயே லஸ்ஸியை செய்வது ஒரு தனி ருசி தானே. அதற்குத்தான் இந்த 5 டிப்ஸ்.


1. வீட்டில் தயார் செய்த தயிரைப் பயன்படுத்துங்கள். வீட்டிலேயே பாலை காய்ச்சி ஆறவிட்டு அதில் தயிர் சில துளிகள் சேர்த்து உறையவிட்டு வீட்டிலேயே கெட்டியான தயிர் தயாரித்துக் கொள்ளுங்கள். வீட்டில் தயார் செய்த தயிரில் தான் வெண்ணெய் நிறைந்திருக்கும். சந்தையில் ரெடிமேடாகக் கிடைக்கும் ஃப்ளேவர்ட் தயிர் லஸ்ஸிக்கு ஒரிஜினல் சுவை தராது.


2. தயிரை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். ஒரு ப்ளண்டரில் தயிரை நன்றாக அடிக்கவும். அதேபோல் மரத்தால் ஆன தயிர் மத்து கொண்டு கடைந்தால் மிகவும் ருசியான பதமான லஸ்ஸி தயிர் கிடைக்கும்.


3. தயிரை கடையும்போது அதில் அதிகமாக தண்ணீர் சேர்க்கக் கூடாது. தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மத்தால் கடைந்தால் பதமான அளவில் தயிர் கிடைக்கும். 


4. அதேபோல் தயிரைக் கடையும்போது கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் போட்டுக் கொண்டால் தயிர் நன்றாக வெண்ணெய் திரண்டு வரும்.


5. சிலருக்கு லஸ்ஸியைக் குடிக்கும்போது அதை கடிப்பதுபோன்ற உணர்வு வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது வெண்ணெய் வாயில் திரண்டு வர வேண்டும் என நினைப்பார்கள்.அப்படி விரும்புவோர் லஸ்ஸியில் தாராளமாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கடைந்து கொள்ளலாம்.


லஸ்ஸி செய்முறை:


முதலில் 400 Ml புளிக்காத தயிரையும் ஒரு கப் அளவிலான தண்ணீரையும் ஒரு இரண்டு மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைக்க வேண்டும்.


பின்னர் குளிர்ந்த தயிரை ஒரு பெரிய பவுலில் சேர்த்து அதனை மத்து வைத்து நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ளுங்கள். 


தயிரை நன்றாக கடைத்ததும் அதனுடன் மூன்று டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். 


பின் மறுபடியும் சர்க்கரை கரையும் வரை மத்து வைத்நு கடைந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் இரண்டு சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் மற்றும் அரைக்கப் அளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் நன்றாக கடைந்து எடுங்கள். 


ஏற்கெனவே மேலே சொல்லிய டிப்ஸின்படி தண்ணீர் அதிகமாக சேர்த்து விடாதீர்கள் மோர் ஆகிவிடும். பின் கடைந்து எடுத்த லஸ்ஸியை இரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு இரு டம்ளரிலும் இரண்டு டீஸ்பூன் அளவு பால்கோவா சேர்த்து அதன் மேல் உடைத்த முந்திரி பருப்புகளை தூவி விடவும். அவ்வளவு தான் குளு குளு லஸ்ஸி தயார்.


லஸ்ஸியை யார் தவிர்க்க வேண்டும்?


லஸ்ஸி அதிகப்படியான சக்கரையால் உருவாக்கப்படும் பானம் . இதனை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வைதை தவிர்க்க வேண்டும் . மீறினால் லஸ்ஸியில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு உங்களது நீரிழிவு பிரச்சனையை தீவிரப்படுத்தும்.


மசாலா லஸ்ஸி மற்றும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உங்களுக்கு சிறுநீரக பிரச்சனையை ஏற்படுத்தலாம்.   உப்புகளில் அதிக சோடியம் இருப்பதால், அவற்றைக் குடிப்பதால் ஏற்கனவே இருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் மோசமடையலாம்.


லஸ்ஸி அதிக கலோரி கொண்ட குளிர்பான, . இதில் புரதச்சத்துகள் அதிகம் . எனவே இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது அல்ல .


லஸ்ஸியில் அதிகபடியான லாக்டோஸ் உள்ளது. இது இயல்பாகவே உடலில் தோல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது. அலர்ஜி உள்ளவர்கள் நிச்சயமாக லஸ்ஸியை தவிர்க்க வேண்டும் . 


கோடை காலம் தானே என்று  லஸ்ஸியை இரவு நேரத்தில் பருகினால் சளி, இருமல் , காய்ச்சல் உள்ளிட்ட  பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் .