பள்ளி நண்பர் மூலம் மாமியாரின் நகையை பறித்த மருமகளை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், லலிதாவின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறிந்து சென்று விட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த லலிதா, உடனே இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை செய்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், லலிதாவின் மருமகள் மோகனசுந்திரிக்கு இந்த சங்கிலி பறிப்பில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. போலீசார் உடனே அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் மாமியார் தனது நகையை கொடுத்து உதவியதாகவும், பின்னர், அடகு வைத்த நகையை மீட்டு கொடுக்கக்கோரி அடிக்கடி கேட்டு தனக்கு தொல்லை கொடுத்ததால், அதை மீட்டு கொடுத்ததாகவும், இதன் காரணமாக மாமியாரின் நகையை அபகரிக்க நினைத்து தன்னுடன் படித்த பள்ளி நண்பர் கார்த்திகேயனை மாமியார் வீட்டுக்கு அனுப்பி நகையை பறித்ததாகவும் கூறினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகனசுந்தரியை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். அவரின் நண்பரான கார்த்திகேயனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மருமகளே மாமியாரின் தங்க சங்கலியை பறிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்