உத்தரப் பிரதேசம் குருகிராம் பகுதியில் ஷேர் ஆட்டோவில் புகைபிடித்த தனியார் வங்கி அதிகாரியிடம் புகைபிடிக்க மறுப்பு தெரிவித்த மற்றொரு பெண் பயணி தாக்கப்பட்டுள்ளதாக குருகிராம் காவல்துறையினர் இன்று செய்தி வெளியிட்டுள்ளனர். 


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியின் பல்லப்கார் பகுதியைச் சேர்ந்த வாசு சிங் என்பவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, பின்னர் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சுமன் லதா எனவும், அவர் டெல்லியின் வசீராபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் சுமன் லதா அளித்துள்ள புகாரில், கடந்த பிப்ரவரி 7 அன்று மாலை தனது வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 



குருகிராம் பகுதியின் க்ரீன்வுட் சிட்டி, 46வது செக்டாருக்கு அருகில் ஆட்டோவில் தம்பதி ஒருவர் ஏறியதாகவும், அவர்களுள் இருந்த ஆண் புகைப்பிடித்துக் கொண்டே ஆட்டோவில் ஏறி, புகைப்பிடிப்பதைத் தொடர்ந்ததாகவும் சுமன் லதா கூறியுள்ளார். அவரைப் புகைப்பிடிப்பதை நிறுத்துவாறு கூறிய போது, அந்த நபர் கோபப்பட்டு மறுத்ததாகவும், இதனால் கோபமடைந்த சுமன் லதா அவரின் வாயில் இருந்து சிகரெட்டை எடுத்து வெளியில் வீசியதாகத் தெரிவித்துள்ளார். கடும் ஆத்திரமடைந்த வாசு சிங், சுமன் லதாவின் முகத்தில் குத்தியதில், அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் வாசு சிங் சுமன் லதாவைத் தரக்குறைவாகத் திட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார் சுமன் லதா. 


ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியவுடன், தனது குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்ததாகப் புகார்தாரரான சுமன் லதா தெரிவித்துள்ளார். 



குருகிராம் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, வாசு சிங்கைக் கைது செய்து அவர் மீது, சட்டப்பிரிவுகள் 323 ( தாக்குவது), 325 (வேண்டுமென்றே கடுமையாகத் தாக்குவது), 509 (பெண்களை அவமானப்படுத்துவது) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை துணை ஆய்வாளர் அமித் குமார், வாசு சிங் விசாரணைக்கு ஒப்புக் கொண்டதால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.