ஆந்திராவில் செம்மரம் வெட்டிவிட்டு திருமணக் கும்பல் போல தமிழகம் திரும்பிய கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்
செம்மரத்தை வெட்டிக் கடத்துவது என்பது ஆந்திர போலீசாருக்கு நாளுக்கு நாள் பெரும் தலைவலியாக மாறி வருகிறது. ரீல் புஷ்பாவை மிஞ்சி வருகிறார்கள் ரியல் கடத்தல்காரர்கள். எல்லாத்தையுமே மிஞ்சும் விதமாக அரசுப்பேருந்தை வாடகைக்கு எடுத்து செம்மரம் கடத்திய கும்பலை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
வாடகைக்கு அரசுப்பேருந்து...
தமிழ்நாடு அரசுப்பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருப்பதி - சித்தூர் நெடுஞ்சாலையில் போலீசார் பேருந்தை மறைத்து சோதனையிட்டனர். பேருந்துக்குள் திருமண கோஷ்டி என பெரிய கும்பலே இருந்துள்ளது. திருப்பதியில் திருமணம் முடிந்து ஊருக்கு திரும்புவதாக அந்தக்கும்பல் தெரிவித்துள்ளது. ஆனால் திருமண ஜோடியை பேருந்துக்குள் காணவில்லை. மணமக்கள் வேறு வாகனத்தில் வருவதாக உளறிக்கொட்டியுள்ளது கும்பல். ஏதோ தவறாக இருப்பதாக நினைத்த போலீசார் குறுக்கு விசாரணை செய்துள்ளனர்.
போலீசார் ஓவராக விசாரணை செய்ததும் திடீரென பேருந்துக்குள் இருந்த 36 பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடியுள்ளனர். உடனடியாக பேருந்தின் ஓட்டுநரை பிடித்து விசாரித்துள்ளனர். ஒரு புஷ்பா கதையையே அந்த ஓட்டுநர் கூறியுள்ளார். அரசுப் பேருந்தை வாடகைக்கு எடுத்த செம்மரக் கடத்தல் கும்பல் ஆட்களை பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர். செம்மரத்தை வெட்டி கொடுத்துவிட்டு மொத்த ஆட்களும் ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கும்பலை யார் பணிக்கு அனுப்பியது, செம்மரம் எங்கே வெட்டப்பட்டது போன்ற பல கேள்விகளுக்கு போலீசார் விடை தேடி வருகின்றனர்.
சரக்கு வேனில் ரகசிய அறை..
சித்தூர் மாவட்டம் சந்திரகிரி அடுத்த மூலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த தனது சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து, அதில் செம்மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு எவருக்கு சந்தேகம் வராமல் இருக்க அதற்கு மேல் தக்காளி டிரேக்களை வைத்து கடத்த முயற்சி செய்து போலீசாரிடம் சிக்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்