சென்னையில் இருந்து புறநகர்களுக்கு மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் செல்லும் ரயில்களில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகளிடம் சில நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் சென்று கொண்டிருந்த ரயில் பழைய வண்ணாரப்பேட்டை  பென்சில் பேக்டரி – கொருக்குப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது மெதுவாக சென்றது.




அப்போது, ரயிலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஜன்னலைத் தாவிப்பிடித்து ஜன்னல் ஓரத்தில் இருபந்த பயணிகளிடம் செல்போன் மற்றும் நகைகளை பறிக்க முயற்சித்துள்ளார். இதைக்கண்ட ரயில் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இந்த நிலையில், ஜன்னலில் தொங்கியபடி வந்த அந்த வாலிபர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது கால்கள் ரயில் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.


ரயில் சக்கரத்தில் சிக்கிய அவரது இடது கால் நசுங்கி துண்டானது. வலது காலும் சக்கரத்தில் சிக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடநை்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நவீன் என்ற அட்டை நவீன் என்று தெரியவந்துள்ளது.




21 வயதான நவீன் பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி – கொருக்குப்பேட்டை இடையே வரும் ரயில்கள் மிகவும் மெதுவாக வரும்போது அதைப் பயன்படுத்தி ஜன்னல் ஓரத்தில் இருக்கும் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.


கொள்ளையன் நவீன் மீது ஏற்கனவே கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கால் துண்டான செல்போன் கொள்ளையன் நவீன் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : Crime : அதிர்ந்த மக்கள்.. 600 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி பறிமுதல்.. திண்டிவனத்தில் டீலர் கைது


மேலும் படிக்க : தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்.... ஸ்டேட்டஸ் வைத்து உயிரைவிட்ட மாணவர்..!