விழுப்புரம் : திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை சப்ளை செய்து வந்த மேலும் ஒரு மருந்து விற்பனை பிரதிநிதியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போதை ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

இந்நிலையில், இன்று திண்டிவனம் தனிப்படை போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்தனர், அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார், போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சீதாராமன் கிராமம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 46) என்பதும், இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்துகொண்டு போதை ஊசிகள் மற்றும் மருந்துகளை திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இவர் திண்டிவனம் பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதும், போதை ஊசி விற்பனையில் கைது செய்யப்பட்ட விஜயகுமாரின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில்  போதை மாத்திரைகள் மற்றும போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 600 போதை மாத்திரை, 10 போதை ஊசி, மற்றும் 10 குளுக்கோஸ் பாட்டில்  ஆகியவையை  பறிமுதல் செய்து, இவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.