டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கழிவறைக்குள் 11 வயது மாணவியை இரண்டு சீனியர் மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.






கேந்திரிய வித்யாலயா சங்கதனின் மண்டல அலுவலகமும் இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் ஜூலை மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், டெல்லி மகளிர் ஆணையம் (DCW) இந்த விஷயத்தை கையில் எடுத்த பின்னரே பாதிக்கப்பட்ட சிறுமி செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறையை அணுகி உள்ளார் என கூறப்படுகிறது.


இந்த சம்பவத்தை தீவிரமான விவகாரம் என்று கூறியுள்ள மகளிர் ஆணையம், டெல்லி காவல்துறை மற்றும் பள்ளி தலைமையாசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை என பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரது பெற்றோரோ பள்ளி முதல்வரிடம் தெரிவிக்கவில்லை என்றும், போலீஸ் விசாரணைக்குப் பிறகுதான் தங்களுக்கு தெரிய வந்துள்ளது என்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கேந்திரிய வித்யாலயா சங்கதன் என்பது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது நாட்டில் 25 பிராந்தியங்களில் உள்ள 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மேற்பார்வையிட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், உடனடியாக வழக்குப் பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.


டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து கூறுகையில், "டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 11 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகவும் தீவிரமான விஷயம். தனது பள்ளி ஆசிரியர் இந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். 


இது மிகவும் மோசமானது. தலைநகரில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள் கூட பாதுகாப்பற்றதாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இவ்விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் பள்ளி அலுவலர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.


சம்பவத்தை விவரித்த ஆணையம், "ஜூலை மாதம் தனது வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்த போது, ​​தனது பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் மீது சிறுமி தெரியாமல் மோதியுள்ளார். அவர் அம்மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தன்னை துன்புறுத்த ஆரம்பித்ததாகவும், கழிவறைக்குள் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி கூறினார். 


மாணவர்கள், கழிவறை கதவை உள்ளே இருந்து பூட்டிவிட்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்தபோது, ​​மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறியதாகவும், விஷயம் மூடிமறைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் எதுவும் வரவில்லை என்று கேவிஎஸ் அலுவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர், ஊழியர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய அம்மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.