தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் அவசர சட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேலும் இதுகுறித்து இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி என்ற அரக்கனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, தற்கொலை என குடும்பங்களை சீரழிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. குறுக்கு வழியில் பணம் சம்பாதித்துவிடலாம் என்ற அவநம்பிக்கையில் அகல கால் வைத்து அதல பாதாளத்தில் வீழ்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தரக்கூடிய ஒரு விவகாரமாகும். ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் நடைபெறும் சூதாட்டங்களில் பணத்தை பறிகொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக வாழ்வின் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய இளம் தலைமுறையினர் தான் ஆன்லைன் ரம்மியால் விபரீத முடிவை நாடுகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்த ரவி. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வரும் இவரது மகன் சந்தோஷ் (22), மணப்பாறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவன் செலவுக்கு பணமின்றி கடந்த 4 ம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறிய கல்லூரி மாணவன், அனைத்தையும் ஆன் லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த இன்ஜினியரிங் மாணவன் சந்தோஷ் தனது செல்போனில் தற்கொலை செய்துகொள்ளபோவதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில், மணப்பாறை கீரை தோட்டம் என்றயிடத்தில் ரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜியனிரிங் படிக்கும் கல்லூரி மாணவன் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி, விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்