செங்கல்பட்டு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து படாளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதைக்கு அடிமையான தம்பி
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த குமாரவாடி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கு செல்வம் (40) மற்றும் நாகராஜ் (33) என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். மது போதைக்கு அடிமையான நாகராஜ் தினமும் இரவு வீட்டுக்கு வரும்போது போதையில் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மதுவுக்கு அடிமையான நாகராஜ் அவ்வப்போது செல்வத்திடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக செல்வம் மற்றும் நாகராஜ் ஆகிய இருவருக்கிடையே அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது.
மது போதையில் தகராறு
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராத நாகராஜ் அதிக மது போதையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் செல்வத்திற்கும் நாகராஜருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அவரது தந்தை நீலகண்டன் தடுக்க சென்றதால் போதையில் ஆத்திரமடைந்த நாகராஜ் தந்தையை தாக்க முயன்ற நிலையில் நாகராஜ் செல்வத்தை அருகில் இருந்த கத்தியை எடுத்து மார்பு பகுதியில் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வம் குடும்பத்தினர் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார் நாகராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை சொல்வது என்ன ?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது: மது போதையில் நாகராஜ் தொடர்ந்து எந்தவித வேலைக்கும் செல்லாமல் வீட்டிற்கும் பணம் கொடுக்காமல் தொடர்ந்து வீட்டினரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இருப்பவர்கள் நாகராஜன் தட்டி கேட்டாலும் அவர்களை தாக்குவது அவர்களிடம் சண்டை போடுவது என தொடர்ந்து, பிரச்சனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் நடைபெற்ற நாள் அன்று குடித்துவிட்டு வந்த தம்பியை தட்டி கேட்ட அண்ணனை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.