இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.


முதல் டெஸ்ட்:


இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்  ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி 150 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஐந்து ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளும், மிச்சேல் ஸ்டார்க் மற்றும் மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர். 


இதையும் படிங்க: IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!


மிரட்டிய பும்ரா:


ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்ஸ் தொடங்கியவுடன், இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ராவின் புயலில் சிக்கிய  ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 69 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் ஸ்டீவன் ஸ்மித் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். ஸ்மித்தை கோல்டன் டக்காகி வெளியேற்றிய இரண்டாவது  வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பும்ரா பெற்றார். இதற்கு முன்னால் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், ஸ்மித்தை கோல்டன் டக்காகி வெளியேற்றி இருந்தார். அதற்கு பிறகு பும்ரா தான் ஸ்மித்தை முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்துள்ளார்.






கடுப்பேற்றிய ஸ்டார்க்:


இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அலெக்ஸ் கேரி 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேற அடுத்து வந்த நாதன் லயனும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு மிட்செல் ஸ்டார்க் கடுப்பை கிளப்பினார். ஸ்டார்க்கும் ஹேசில்வுட்டும் இறுதி விக்கெட்டுக்கு 25 ரன்களை சேர்த்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ்  இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்ததன் மூலம் இந்தியா முதல் இன்னிங்ஸ்சில் 46 ரன்கள் முன்னிலை பெற்றது.