இன்று உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இதனால் நாளை வரை (நவ. 24) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்


தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். 3 கிலோ பதப்படுத்தப்பட்ட, உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த இளம்பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.



6வது நாளாக உயர்ந்த தங்கம் விலை


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரிக்கு, 58 ஆயிரத்து 400 ரூபாயை எட்டியுள்ளது. இரு கிராம் விலை 75 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 920 ரூபாய் அதிகரித்துள்ளது.


மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்


288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம், மீண்டும் அக்கட்சி அங்கு ஆட்சியை தக்கவைக்கிறது. அதேநேரம், 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்டில் பெரும்பான்மையை பெறுவதில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், அங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


பிரியங்கா காந்தி முன்னிலை


பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார். சுமார்1 லட்சம் வாக்குகள் வரை அவர் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மணிப்பூரில் இதுவரை 258 பேர் பலி


மணிப்பூரில் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை ஓயாத கலவரத்தால், தற்போது வரை 258 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அங்கு இயல்பு நிலையை மீட்கும் நோக்கில் கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரித்துள்ளார்.


சீனா சலுகை அறிவிப்பு


பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது. அதன்படி, ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்,  30 நாட்கள் வரை சீனாவில் விசா இன்றி தங்கிக் கொள்ளலாம்.


உக்ரைன் நாடாளுமன்றம் திடீர் ரத்து


ரஷ்யா நடத்திய புதிய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாடாளுமன்ற கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரில் வெளிநாட்டு ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தியது


இந்திய அணி முன்னிலை


இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.


இந்திய அணி தோல்வி


சென்னையில் ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று - கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போராடித் தோல்வி. 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் கத்தார் அணி வென்றது. வரும் 25ம் தேதி கஜகஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது. இதில் வென்றால் மட்டுமே ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும்