கணவன்-மனைவி 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் அருகே உள்ள நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (45) . இவர் மனைவி கவிதா (36). சுகுமார் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வருகிறார். கவிதா நடராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இரவு நேரங்களில் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.  

 

மனைவியை கண்டித்த கணவர்

 

இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கவிதாவிற்கும் அங்கு பணிபுரியும் மற்றொரு நபருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. கவிதாவும் அவருடைய ஆண் நண்பரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.‌ இதுகுறித்த தகவலும் கணவர் சுகுமாருக்கு தெரியவர இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது எனவும், ஊர் இது குறித்து தவறாக பேசுகிறது எனவும் கண்டித்துள்ளார். 

 

சதி திட்டம் தீட்டிய மனைவி

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதுகுறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சில நாட்கள் பிரிந்தும் இருந்துள்ளனர். கணவன் தனது திருமணம் தாண்டிய உறவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டுக் கொண்டு வருவதால், கணவனின் கதையை முடித்து விட வேண்டும் என மனைவி கவிதா சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை கணவர் சுகுமாரின் அண்ணனான மணி என்பவரிடம் 400 ரூபாய் பணம் கொடுத்து, இரண்டு மது பாட்டில்களை வாங்கி வர சொல்லி இருந்தார். அவரும் வாங்கி வந்த  மதுவை  கவிதாவிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளார் . அதில் ஒரு பாட்டிலை மணியிடம் கொடுத்துவிட்டு, ஒரு பாட்டிலை மட்டும், இவர் எடுத்துச் சென்று அந்த மது பாட்டிலில் சிரஞ்சி மூலம் மதுவில் விஷம் கலந்துள்ளார்.  இதனை அடுத்து அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை  மதுபாட்டிலை கவிதா தன் கணவரிடம் கொடுத்துள்ளார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏற்கனவே சுகுமார் குடித்திருந்ததால் இந்த மது பாட்டிலேயே வேறொரு நாள் குடித்துக் கொள்ளலாம் என பத்திரப்படுத்தி எடுத்து வைத்துள்ளார் சுகுமார்.

 

பங்கு கேட்ட நண்பர்

 

மறுநாள் திங்கட்கிழமை காலையில், அவர் வேலைக்கு செல்லும் பொழுது இந்த மதுபாட்டிலும் எடுத்துச் சென்றுள்ளார்.‌ மதியம் உணவு நேரத்தின்போது மதுவை குடிக்க முயற்சிக்கும், பொழுது அவருடன் பணி செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவருடைய பல ஆண்டுகால நண்பருமான ஹரிலால் (40) என்பவர் தனக்கும் மதிவில் பங்கு கேட்டுள்ளார், இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு உணவு முடித்துக் கொண்டு மீண்டும் வேலைக்கு செல்லும் பொழுது, இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஹரிலால் அங்கே மயங்கி விழுந்துள்ளார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

இருவர் உயிரிழப்பு

 

பிறகு வீட்டுக்கு சென்ற சுகுமார் அங்கு அவருக்கு நிலைமை மோசமாக, அவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின் போது இருவரும் மதுவில் விஷம் கலந்து அருந்தி உள்ளது தெரிகிறது. இதனால் தான் இவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் படாளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவி கவிதா மீது சந்தேகம் வர அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் மதுவில் விஷம் கலந்தது ஒப்புக் கொண்டுள்ளார். கணவரை கொலை செய்ய என்ன காரணம் என துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் ‌. இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று வந்த இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.