கோவை அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு உணவு உட்கொள்ள வந்த மாணவர்கள் அசைவ உணவு அதிகமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மறுக்க இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், விறகுக்காக பயன்படுத்தப்படும் கட்டைகளை எடுத்துக் கொண்டு இருதரப்பும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவிகள் அதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர் இரு தரப்பையும் சமாதானமும் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி வளாகத்தில் விசாரணையும் தற்போது முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களை தாக்கும் வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்