செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருள் வெடித்த அதிர்வினால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி காணப்பட்டன.


பயங்கர ஓசையுடன் வெடித்த மர்ம பொருள் 


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளீர் காவல் நிலையம் அருகில், கைவிடப்பட்ட பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த பாழடைந்த கட்டிடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் பயங்கர ஓசையுடன் மர்ம பொருள் ஒன்று வெடித்ததால் அந்த பாழடைந்த கட்டிடத்தில் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. 


தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவி அபிராம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் மர்ம பொருள் வெடித்து அந்த கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை பார்வையிட்டனர். உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு மாமல்லபுரம் தீயணைப்பு துறை உதவி அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அனைத்தனர். 


நடந்தது என்ன ?


பிறகு இந்த பாழடைந்த கட்டிடத்தில் வெடித்த மர்ம பொருள் என்ன? இந்த குடியிருப்பில் வசித்துவிட்டு சென்றவர்கள் விட்டு சென்ற சிலிண்டர் ஏதாவது வெடித்து இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் கசிந்து இந்த தீவிபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் இருள் சூழ்ந்து உள்ளதால் காலையில் போலீசார் மர்ம பொருள் வெடித்த கட்டிடத்திற்குள் சென்று சோதனை நடத்திய பிறகே என்ன மாதியான பொருள் வெடித்து இந்த கட்டிடம் சேதமடைந்தது என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் மர்ம பொருள் வெடித்ததால் அந்த கட்டிடத்தில் காங்கிரிட் சிதறல்கள் அங்குள்ள சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன. 


போலீசார் தீவிர விசாரணை


மேலும் மர்ம பொருள் வெடித்த அதிர்வில் அருகில் உள்ள இரண்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி தூள், தூளாக கீழே சிதறி கிடந்ததை காண முடிந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கு இந்த மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானதில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர். வீட்டிலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி சிதறியதால், வீட்டிலிருந்த மூன்று பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.