ரிஷப் பண்ட் நாளை நடைபெறும் போட்டியில் களம் இறங்குவாரா இல்லையா என்பது குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.


இந்தியா – நியூசிலாந்து:


இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், இரண்டாவது நாளான இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.


மழை பெய்துள்ள சூழலில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் நடந்ததோ வேறு ஒன்று. இந்திய அணி 46 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.


ரிஷப் பண்ட் களம் இறங்குவாரா?


இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறு என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,"சுப்மன் கில் காயம் அடைந்த நிலையில் சர்பராஸ் கானை அணிக்கு கொண்டு வந்தோம். கே.எல் ராகுல் தற்போது தான் நடு வரிசையில் ஆறாவது இடத்தில் களமிறங்கி செட்டில் ஆகி இருக்கிறார். நாங்கள் ராகுலை 5 அல்லது ஆறாவது இடத்தில் தொடர்ந்து விளையாட வைக்க நினைக்கின்றோம்.


திடீரென்று இந்த போட்டிக்காக அவருடைய பேட்டிங் பொறுப்பை மாற்ற நான் விரும்பவில்லை. இதே போல் தான் சர்பராஸ்கானுக்கும் வாய்ப்பு வழங்க நினைத்தோம். ஆனால் விராட் கோலி தான் அணியின் சீனியர் வீரராக தான் கில் இல்லாத நிலையில் அவருடைய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். அணியின் சீனியர் வீரர்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன். கோலியே சொன்ன பிறகு நான் அவரை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பினேன்.


இதேபோன்று ரிஷப் பண்ட்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதே இடத்தில் பந்து பட்டது. இதனால் அவருக்கு வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிஷப்  எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவரை வைத்து நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் தான் பண்ட்க்கு ஓய்வு வழங்கினோம். இன்று இரவு அவருடைய காயம் எப்படி இருக்கிறது என்று பார்த்து நாளை அவர் களமிறங்குவாரா இல்லையா என்பதை முடிவு செய்வோம்"என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.