Womens T20 Wordcup: மகளிர் டி20 உலகக் கோப்பையில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, தென்னாப்ரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. துபாயில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலியா Vs தென்னாப்ரிக்கா:


போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி 44 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 31 ரன்களும் மற்றும் மெக்ராத் 27 ரன்களும் சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 134 ரன்களை மட்டுமே எடுத்தது. தென்னாப்ரிக்கா சார்பில், அயபோங்கா காகா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அடித்து ஆடிய தென்னாப்ரிக்கா:


இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீராங்கனையான ப்ரிட்ஸ் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்த்யு ஜோடி சேர்ந்த லாரா மற்றும் போஸ் கூட்டணி, ஆஸ்திரேலியா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. லாரா 37 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய போஸ் 48 பந்துகளில் 74 ரன்களை குவித்தார். இதனால், 17.2 ஓவர்களில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, தென்னாப்ரிக்கா அணி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்ரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதோடு, கடந்த உலகக் கோப்பை ஃபைனலில் பெற்ற தோல்விக்கு ஆஸ்திரேலியாவை பழிவாங்கியுள்ளது.


அதோடு, மகளிர் டி20 உலகக் கோப்பைகளில் தொடர்ந்து 15 வெற்றிகளை குவித்த ஆஸ்திரேலிய அணி, தற்போது முதல் தோல்வியை கண்டுள்ளது. இதுவரை 6 முறை மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, கடந்த மூன்று முறையும் வென்று ஹாட்ரிக் பதிவு செய்திருந்தது. இந்நிலையில், இந்த முறை தென்னாப்ரிக்கா அணியிடம் அரையிறுதியில் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.


நியூசிலாந்து Vs மேற்கிந்திய தீவுகள்:


இன்று நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஹாட் ஸ்டார் அலைவரிசையிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதில் வெற்றி பெறும் அணி, வரும் 20ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை எதிர்கொள்ளும்.