சிறார் கூர்நோக்கு இல்லம் ( chengalpattu juvenile home )


செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சிறார் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. சென்னையை ஒட்டி அமைந்துள்ள  சிறார் கூர்நோக்கு இல்லம் என்பதால், சிறுவயதிலேயே குற்றம் செய்யும் சிறுவர்கள், பலரும் நீதிமன்ற உத்தரவுன்படி இந்த சிறார் கூர்நோக்கு பள்ளியில், அடைத்து அவர்களுக்கு நன்னெறிகள் மற்றும் கல்வி உள்ளிட்டவற்றை போதித்து வருகின்றனர். சிறுவயதிலேயே சூழ்நிலை காரணமாக குற்றம் செய்யும் சிறுவர்கள், சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து, வெளியேறும் பொழுது, சமூகம் மதிக்கும் நபராக வெளியே அனுப்ப வேண்டும் என்பதே இந்த இல்லத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.



 


அடித்து கொலை

 

இந்த நிலையில் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லமானது, கடந்த சில மாதங்களாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தாம்பரம் பகுதியை சேர்ந்த, கோகுல் ஸ்ரீ என்ற சிறுவன் செங்கல்பட்டு இல்லத்தில் பணியாற்றி, வரும் காவலர்களால், அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த மாதமே செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு பள்ளியிலிருந்து, 2 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 



5 சிறார்கள் தப்பி ஓடியுள்ளனர்


செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பி ஓடியுள்ளனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கூர்நோக்கு இல்லத்தில் சுமார் 43 சிறுவர்கள் நேற்று வரை இருந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை 5 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். அச்சமயம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆசிரியர்கள், 5 சிறுவர்களை தடுக்க முயன்றனர். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆசிரியர்கள் குணசேகரன், பாபுவை செங்கல்லால் தாக்கிவிட்டு சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய 5 சிறுவர்களை தேடும் பணியில் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரணத்தை கண்டுபிடிக்க கோரிக்கை


அவ்வப்பொழுது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதை ஆகியுள்ளதால் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி ஏபிபி நாடு செய்தி இணையதளத்தில், செங்கல்பட்டு இல்லத்தில் பல்வேறு மர்மங்கள் நடைபெறுகிறது என்பது குறித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் உடனடியாக இது குறித்து, சமூக நலத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டிருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.




EXCLUSIVE : செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் நடக்கும் மர்மங்கள் ..! அடுத்தடுத்து சர்ச்சைகள்! என்ன நடக்கிறது?


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.