தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளது அ.தி.மு.க. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக செல்வாக்கு செலுத்தி வந்தது. ஆனால், தற்போது நிலைமையோ வேறு. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தேர்தலை சந்தித்த அதிமுக 37 இடங்களில் வென்று தேசிய அளவில் பெரும் சக்தியாக உருவானது.


மக்களவையில் பிரதிநிதி இல்லாத அதிமுக:


ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கட்சியில் பிளவு ஏற்பட்டு பெரும் சவால்களை சந்தித்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், 2019ஆம் ஆண்டு தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வென்றது. அது, வேறு எங்கும் இல்லை. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தேனியின் மக்களவை தொகுதியில்.


தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திரநாத். அந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி. கே. எஸ் இளங்கோவனை எதிர்த்து களம் கண்ட அவர், முடிவுகள் அறிவிப்பதில் பெரும் இழுபறி நிலவியதை தொடர்ந்து, 76,672 வாக்குகள் வித்தியாதத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார் என்றும் தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரியும் தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே சூழல்:


தற்போது, வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை சென்னை உயர் நீதிமன்றம், தேனி மக்களவை தொகுதியில் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதன் காரணமாக, மக்களவையில் அதிமுகவுக்கு பிரதிநிதி இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதிமுக போன்ற செல்வாக்கு மிக்க கட்சிக்கு, இதுபேன்ற சூழல் உருவாவது இது முதல் முறை அல்ல. குறிப்பாக, ஜெயலலிதா தலைமையிலேயே அதிமுக இதுபோன்ற சூழலை எதிர்கொண்டுள்ளது.


2004 படுதோல்வி:


கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக படுதோல்வியை சந்தித்தது. போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வி பெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி, 39 தொகுதிகளையும் கைப்பற்றி பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.


இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது தமிழ்நாடுதான். 2004ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு அதிமுக தோல்வியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு முறையும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. 


தற்போது, மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. அப்போது, ஜெயலலிதா தலைமையில் அடுத்த தேர்தலிலேயே மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.